2012-07-14 15:04:11

சூரிய ஆற்றலின் தொடர் கவனிப்பு அவசியம்:நாசா அறிவியலாளர்


ஜூலை14,2012. "சூரிய ஆற்றல், இயக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து, தொடர்ந்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்வதால், மனிதர்களுக்கு தீமை ஏற்படும் சூழல் உருவாகிறது'' என, நாசா அறிவியலாளர் Madhulika Guhathakurta பேசினார்.
கோயம்புத்தூர் கதிர் பொறியியல் கல்லூரியில், "Living with Stars” எனும் தலைப்பில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற கருத்தரங்கில், சூரியக் கோள் பற்றி ஒலி-ஒளிப் படங்கள் மூலம் விளக்கி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் Madhulika.
விண்வெளியில் சூரியக் கோள், ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. சூரியனின் வெளிப்புறம், 5,000 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பநிலை உடையது. கோளவடிவமான, திடப்பொருள் இல்லாத் தோற்றம் கொண்ட சூரியனில், ஆற்றல் உருவாகும்போது, ஒளி வெளியிடப்படுகிறது. தற்போது, டெலிஸ்கோப் மூலம் பார்க்கும் போது, சூரியனிலுள்ள புள்ளிகள் தெரிகின்றன. இவை, வெகு சாமர்த்தியமாகவும், வலிமையும் கொண்ட காந்த சக்தியுடன் திகழ்கிறது என்றும் மதுலிகா கூறினார்.
சூரிய ஆற்றலில் ஏற்படும் மாற்றங்களால், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப நிகழ்வுகள் முடக்கம், மனிதர்களுக்கு தீமைகள் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு நிலைகள் உருவாகின்றன என்றும் Madhulika கூறினார்.
வானிலை மாற்றங்கள் என்பது, சூரியக் காற்றின் தன்மையை பொருத்தது. வானிலை மாற்றங்கள் காரணமாக, விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் தாமதம், தோல்வி, விமானங்களின் தகவல் தொடர்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பொருளாதார ரீதியாக, பல கோடி ரூபாய்களை இழந்துள்ளோம். சூரியக் காற்று, சூரியனிலுள்ள புள்ளிகள், அங்கு ஏற்படும் தட்பவெட்ப நிலைகள் ஆகியவற்றை, கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்றார் Madhulika.







All the contents on this site are copyrighted ©.