2012-07-13 16:12:45

நைஜீரியாவில் ஒரு பெரிய வகுப்புவாத மோதல் உருவாகக் கூடும் - கிறிஸ்தவ-முஸ்லீம் பிரதிநிதிகள் குழு எச்சரிக்கை


ஜூலை13,2012. நைஜீரியாவில் Boko Haram பிரிவினைவாதக் குழு தற்போது நடத்தி வரும் வன்முறைச் செயல்கள், அந்நாட்டில் ஒரு பெரிய வகுப்புவாத மோதல் உருவாகக் காரணமாக அமையக்கூடும் என்று, அந்நாட்டை அண்மையில் பார்வையிட்டுத் திரும்பியுள்ள கிறிஸ்தவ-முஸ்லீம் பிரதிநிதிகள் குழு எச்சரித்துள்ளது.
WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றப் பொதுச் செயலர் Olav Fyske Tveit மற்றும் Royal Aal al-Bayt என்ற இசுலாமிய நிறுவனத் தலைவர் ஜோர்டன் இளவரசர் Ghazi bin Muhammad தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு அண்மையில் நைஜீரியாவைப் பார்வையிட்ட பின்னர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு எச்சரித்துள்ளது.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே தற்போது இடம்பெற்று வரும் சண்டை, 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டுவரை போஸ்னியாவில் இடம்பெற்ற வன்முறைக்குப் பின்னர் கொடூரமானதாக இருக்கின்றது என்று கூறும் அக்குழு, தற்போதைய நைஜீரியச் சண்டைக்கு மூலகாரணம் மதத்தையும் கடந்ததாக இருக்கின்றது என்றும் கூறியது.ஊழல், முறைகேடான நிர்வாகம், நிலத்தகராறுகள், மோதல்களில் பலியானவர்களுக்கு உதவிகள் கிடைக்காமை, பதட்டநிலைகளைத் தூண்டிவிடுவோர் தண்டிக்கப்படாமல் இருப்பது போன்றவை இம்மோதல்களுக்குக் காரணங்கள் என்றும் இக்குழு குறை கூறியது.







All the contents on this site are copyrighted ©.