2012-07-12 15:07:43

புனித பெனடிக்ட் திருநாளையொட்டி, திருத்தந்தைக்கென சிறப்பான இசை நிகழ்ச்சி


ஜூலை,12,2012 ஓர் இசைக் குழுவில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களோடு இணைந்து ஒருமித்த இசையை உருவாக்குவதுபோல், மக்களும் ஒருவருக்கொருவர் செவிமடுத்து செயல்பட்டால் உலக அமைதியை உருவாக்க முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஜூலை 11, இப்புதனன்று கொண்டாடப்பட்ட புனித பெனடிக்ட் திருநாளையொட்டி, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காச்தல் கொந்தோல்போவில் ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சி திருத்தந்தைக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitanoவும் சென்றிருந்தார்.
இவ்விசை நிகழ்ச்சியின்போது திருத்தந்தை வழங்கிய உரையில், இசைக் குழுவினர் மத்தியில் நிலவும் ஒருமைப்பாட்டையும், ஒருவரை ஒருவர் மதிக்கும் பாங்கையும் திருத்தந்தை பாராட்டினார்.
மேற்கத்திய-கிழக்கித்திய திவான் இசைக்குழு (West-Eastern Divan Orchestra) என்ற இவ்விசைக்குழுவில் இஸ்ரேல், பாலஸ்தீனம், மற்றும் ஏனைய அரபு நாடுகளின் இளையோர் பங்கேற்றனர். இவர்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வோர் இசைக் குழுவிலும் பல்வேறு இசைக் கருவிகள் வாசிக்கப்படுகின்றது, பல குரல்கள் ஒலிக்கின்றன, எனினும் இவை அனைத்தும் இணைந்து உருவாக்கும் இசை, கலைநயம் மிக்கதாய் மனதை மேலே எழுப்புகிறது என்று கூறியத் திருத்தந்தை, இசைக்கருவிகளும், குரல்களும் இணைந்து வருவது தானாய், எதேச்சையாய் உருவாவதில்லை, மாறாக, பலரது நீடித்த முயற்சியினால் உருவாகிறது என்று எடுத்துரைத்தார்.
மதம், நாடு என்ற பிரிவுகளைக் கடந்து, இசை நம்மை இணைக்க உதவுவதுபோல், உரையாடல்களும் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை நீக்கி நம்மை ஒருங்கிணைக்க முடியும் என்று திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.