2012-07-12 15:08:12

உரையாடல்கள் மூலம் தீர்வுகளைக் காண பெரு நாட்டின் கர்தினால் அழைப்பு


ஜூலை,12,2012 பெரு நாட்டின் நலனை மனதில் கொண்டு மோதல்களை விடுத்து, உரையாடல்கள் மூலம் தீர்வுகளைக் காணவேண்டும் என்று Lima உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Juan Luis Cipriani அழைப்பு விடுத்துள்ளார்.
பெரு நாட்டின் Cajamarca பகுதியில், நாட்டிலேயே மிகப் பெரிதெனக் கருதப்படும் Conga என்ற தங்கம் மற்றும் வெண்கலச் சுரங்கம் தோண்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அப்பகுதி மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஜூன் மாத இறுதியில் ஆரம்பித்த இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளனர், மற்றும் 20க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தைகளை நடத்த அந்நாட்டுப் பேராயர் Miguel Cabrejos அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுப் பேசிய கர்தினால் Cipriani, கடந்த சில வாரங்களாக பெரு நாடு சந்தித்துவரும் கடினமான காலத்திற்கு விரைவில் ஒரு தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மனித உயிர்களையும், மனித மாண்பையும் முன்னிறுத்தி மக்களாட்சி அமைவதையே திருஅவை ஆதரித்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் Cipriani, கருத்துவேறுபாடுகள் நிலவும்போது உண்மையை அறிவதற்கு அனைவரும் திறந்த மனம் கொண்டிருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.