2012-07-12 15:08:33

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை நடத்திய மாற்றுத் திறனாளிகள் தேசிய நாள்


ஜூலை,12,2012 இலண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கிவரும் வேளையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்கத் திருஅவை, மாற்றுத் திறனாளிகளை மையப்படுத்திய ஒரு கருத்தரங்கையும், தேசிய நாளையும் கடைபிடித்தது.
"கடவுளின் மிக ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் மென்மையான குரலோலியே மாற்றுத் திறனாளிகளின் உடல்" என்று அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறிய வார்த்தைகளுக்கு ஒரு வெளிப்படையான அடையாளமாக திருஅவை கொண்டாடிய இந்த நாள் அமைந்தது என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.
Southwark பேராயர் Peter Smith துவக்கிவைத்த இந்தக் கருத்தரங்கில் 'அனைவருக்கும் இடமுண்டு' என்ற மையக்கருத்தில் விளையாட்டுக்களையும், இறையியலையும் இணைத்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கருணையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை இணைத்துக்கொள்வது என்ற எண்ணம் மட்டுமே இன்றைய காலத்தில் போதாது என்று கூறிய பேராசிரியர் John Swinton, விவிலிய மதிப்பீடுகளின் கண்ணோட்டத்தில், அனைவருக்கும் இவ்வுலகில் இடம் உண்டு என்ற உண்மையை எடுத்துரைக்கவேண்டும் என்று கூறினார்.
வெளித்தோற்றத்தைக் கொண்டு மட்டும் மனிதர்களை மதிப்பிடும் போக்கிற்கு மாற்றாக, கிறிஸ்துவின் பார்வையில் ஒவ்வொரு மனிதரையும் சிறப்பான படைப்பாகக் காணும் ஒரு வாய்ப்பை மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் நமக்குத் தருகின்றன என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் திருஅவையின் அதிகாரி Cristina Gangemi கூறினார்.








All the contents on this site are copyrighted ©.