2012-07-11 15:26:44

திருஅவையில் திருப்புமுனைகள் – துன்புறுவோரில் இறைனைக் கண்ட தந்தை அருப்பே


ஜூலை11,2012. அது 1945ம் ஆண்டு. ஆகஸ்ட் 6. ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட நாள். அந்தப் பேரவலம் ஏற்படுவதற்குச் சற்று முன்னதாக போர் விமானம் ஹிரோஷிமா நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்ததைப் பார்த்தார் இயேசு சபை அருள்தந்தை பேத்ரோ அருப்பே. அச்சமயம் இவர், ஹிரோஷிமாவுக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள இயேசு சபை இல்லத்தில் இயேசு சபை நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். என்ன நேருமோ என நினைத்துக் கொண்டிருந்த அந்த நொடிப் பொழுதில் திடீரென அந்த இல்லத்தின் சன்னல்களும் கதவுகளும் நொறுங்கின. ஆயினும் கட்டிடம் ஓரளவு உறுதியாக இருந்தது. அந்த இயேசு சபை இல்லத்திலிருந்த 8 பேரும் உயிர் தப்பினர். இது வரலாற்றையும் கடந்த ஒரு நிரந்தர அனுபவம் என்று சொல்லியிருக்கிறார் தந்தை பேத்ரோ அருப்பே. அவர்கள் இல்லத்துக்கு அருகிலிருந்த குன்றின்மீது நின்று பார்த்த போது ஹிரோஷிமா நகரம் முழுவதும் நெருப்பு ஏரி போலத் தெரிந்தது என்றும், 2 இலட்சம் பேர் இறந்து கிடந்ததை நாங்கள் கண்டோம் என்றும் சொல்லியிருக்கிறார் தந்தை அருப்பே. இவர் ஒரு மருத்துவர் என்பதால் அணுகுண்டு தாக்குதலால் காயம்பட்ட பலருக்கும் இறந்தவர்களுக்கும் உதவினார். இயேசு சபை நவதுறவியர் இல்லம் மருத்துவமனையாக மாறியது. அவர்களது இல்ல ஆலயம் பாதி அழிந்திருந்தாலும் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அங்கு இவரிடம் 150 முதல் 200 பேர் வரை சிகிச்சை பெற்றனர். இவர்களில் ஒரு சிறுவனைத் தவிர மற்ற அனைவரையும் காப்பாற்றி விட்டனர். அங்கு அருகருகில் படுத்திருந்தவர்கள் கடும் வேதனையால் சுருண்டு சுருண்டு படுத்திருந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக தந்தை அருப்பே விவரித்திருக்கிறார்.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் இயேசு சபை இல்ல ஆலயத்தில் தந்தை அருப்பே திருப்பலி நிகழ்த்தினார். அந்த நேரத்தில் அவர் அடைந்த வேதனை அனுபவத்தை அவர் எவ்வாறு விளக்கியிருக்கிறார் என்றால் ....
நான் திருப்பலி நிகழ்த்திய போது அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால் அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன்னால் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச் சிந்தனைகளை எண்ணிய போது எனது விரிந்த கைகள் அப்படியே நின்று விட்டன. அங்குப் படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை எனது உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக இந்தப் பலிபீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். அது எனது வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி
என்று தந்தை அருப்பே தனது நினைவுகளை எழுதியுள்ளார். இவர் மருத்துவர் என்பதால் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலுக்குப் பின்னர் அவர்களது நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்லாமல் வெளியிலும் சென்று தன்னாலான மருத்துவ உதவிகளைச் செய்தார். ஒருநாள் மாலை அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்த போது, Nakamura San என்ற இளம்பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர்வீச்சால் அப்பெண்ணின் உடலில் பெரும்பகுதி எரிந்துபோய், அவர் கடும் வேதனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்பெண் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே தனது கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை அடக்கிக் கொண்டு அவர் அருகில் முழந்தாட்படியிட்டு காயங்களுக்கு மருந்து போட்டார். அப்போது அந்தப் பெண் தந்தையிடம், சாமி, எனக்குத் திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். ஆம் என்று தலையை அசைத்தபடியே தான் எடுத்துச் சென்றிருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தார். மிகுந்த பக்தியுடன் அதனை உட்கொண்ட அந்தப் பெண் Nakamura San சில நிமிடங்களில் அந்த இறைவனிடம் சென்று விட்டார்.
இந்த நிகழ்வையும் தந்தை அருப்பே எழுதி வைத்துள்ளார். இவ்வாறு இவர் தனக்கு பல நேரங்களில் ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்களை எழுதி வைத்துள்ளார். எதிலும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டவர். பேச்சை இழப்பதற்கு முன்னர் அவர் செபித்த வரிகளைப் பலர் சொல்வார்கள். ஆண்டவரே, எனது அறிவு புத்தி ஆற்றல் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும். உமது அருள் ஒன்றே போதும் என்ற புனித இஞ்ஞாசியாரின் செபத்தை இவர் செபித்திருக்கிறார். இஸ்பெயினில் பிறந்து புனித இஞ்ஞாசியார் பிறந்த இலொயோலாவில் இயேசு சபையில் சேர்ந்து பெல்ஜியத்தில் இறையியல் படித்து குருவாகி அமெரிக்க ஐக்கிய நாட்டில் மருத்துவப் படிப்பை முடித்தவர் தந்தை அருப்பே.
தந்தை அருப்பே 1965ம் ஆண்டில் இயேசு சபை அதிபராக நியமிக்கப்படும்வரை ஜப்பான் இயேசு சபை மாநில அதிபராகப் பணியாற்றினார். இவர் இலத்தீன் அமெரிக்காவில் ஓர் இயேசு சபை மாநிலத்தைப் பார்வையிட்ட போது ஏழைகள் வாழும் சேரிப் பகுதியில் திருப்பலி நிறைவேற்றினார். அந்த மக்கள் பக்தியோடும் மரியாதையோடும் திருப்பலியில் கலந்து கொண்டது இவரது நெஞ்சை உருக்கியதாகவும், இவர் திருநற்கருணைக் கொடுத்த போது அந்த மக்கள் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததைப் பார்த்துத் தனது கரங்கள் நடுங்கியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்று அந்தத் திருப்பலி முடிந்த பின்னர் ஓர் உயரமான மனிதர் இவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த வீடு பாதி இடியும் நிலையில் இருந்தது. அந்த மனிதர் ஒரு நாற்காலியை எடுத்து தந்தை அருப்பே அவர்களை அதில் அமர வைத்துத் தன்னோடு சேர்ந்து மறையும் சூரியனைப் பார்க்கச் சொன்னாராம். சூரியன் மறைந்த பின்னர் அந்த மனிதர் தந்தை அருப்பேயிடம், இந்த ஏழை மக்களைப் பார்வையிட வந்ததற்கு நன்றி சொன்னாராம். அத்துடன், தான் வைத்திருந்த ஒரே கொடையை தந்தை அருப்பே அவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினாராம். அழகான மறையும் சூரியனைப் பார்க்கும் வாய்ப்பைப் பகிர்ந்து கொள்வதுதான் அந்தக் கொடை என்றாராம். அந்த மனிதரை விட்டுப் பிரியும் போது அவர் எனது கைகளைக் குலுக்கினார். வாழ்க்கையில் இவ்வளவு பாசமாக இருக்கும் மிகக் குறைவான இதயங்களில் ஒன்றைத் தான் சந்தித்த உணர்வு அன்று இருந்ததாக தந்தை அருப்பே எழுதி வைத்துள்ளார். இறைவன்மீதும் ஏழைகள் மீதும் துன்புறுவோர் மீதும் இத்தனை ஆழமான அன்பு கொண்டிருந்தவர் தந்தை அருப்பே
1965ம் ஆண்டில் இயேசு சபை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தந்தை அருப்பே. இதற்குப் பின்னர் இவரது வாழ்வில் நடந்தவைகளை அன்பு நேயர்களே, வரும் வாரம் பார்ப்போம்.
இறையடியார்கள் சொல்கிறார்கள் - இறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். தமக்கு வருவதை எல்லாம் அவனருளாகக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும் என்று.








All the contents on this site are copyrighted ©.