2012-07-11 15:19:06

சிரியாவில் நடைபெறும் போராட்டங்களை ஊடகங்கள் திரித்து, பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன


ஜூலை,11,2012. சிரியாவில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஊடகங்கள் அளவுக்கு மீறி திரித்து, பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என்று மத்தியகிழக்குப் பகுதியில் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அருள்தந்தை Andrew Halemba கூறினார்.
Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பின் மத்தியகிழக்கு திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Halemba, சிரியாவைக் குறித்து வெளியாகும் பல செய்திகளில் பிரசுரிக்கப்படும் புகைப்படங்கள் கணணி வழியாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
50 பேர் கலந்துகொள்ளும் ஒரு போராட்டத்தின் புகைப்படத்தை கணணி வழியாக மாற்றி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதைப்போல் வெளியிடும் Al Jazeera போன்ற செய்தி நிறுவனங்களைக் குறிப்பிட்டு, இத்தகையப் பொய்யான செய்திகள், நாட்டில் அமைதி நிலவ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பெரும் தடைகளாக உள்ளன என்று எடுத்துரைத்தார்.
ஊடகங்களால் தவறாகத் திரித்து காட்டப்படும் சிரியாவின் உண்மை நிலையை உணர்ந்து செயல்பட வேண்டியது Aid to the Church in Need போன்ற அமைப்புக்களின் பெரும் சவால் என்றும் அருள்தந்தை Halemba கூறினார்.
இக்கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, சிரியாவில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு 130000 யூரோக்கள், அதாவது, 80 இலட்சம் ரூபாய் அளவில் அவசர நிதி உதவிகள் செய்து வருகின்றது.








All the contents on this site are copyrighted ©.