2012-07-09 16:00:27

வாரம் ஓர் அலசல் – வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?


ஜூலை09,2012. "இருபதாம் நூற்றாண்டு, அறிவியல் தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு என்றால், 21ம் நூற்றாண்டு அறிவியல் புதினத்தின் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. அறிவைவிட கற்பனைவளம் எப்போதும் முக்கியமானது. கற்பனை இருந்தால்தான் அறிவு வளர்ச்சி அடையும். அறிவுசார்ந்த கற்பனைகள் ஒரு நாட்டை வளமிக்க, முன்னேறிய நாடாக மாற்றும்”. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகர் இராஜன் அவர்கள், இந்த 21ம் நூற்றாண்டை இவ்வாறு கடந்த சனவரியில் விவரித்திருக்க, (பாரதியார் பல்கலைக்கழகம், சனவரி 2012 “அறிவியல் புதினம் Science Fiction” கருத்தரங்கு) இந்த அறிவியல் நூற்றாண்டிலும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு சில கீழ்த்தரமான மனிதமற்ற செயல்கள் ஆங்காங்கே தொடர்ந்து இடம்பெற்றுத்தான் வருகின்றன. இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறையிலிருந்து அனுராதபுரம், அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி கடந்த புதனன்று வெளியானது. இலங்கையில் போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகிய பின்னரும், இது போன்ற மனிதமற்ற செய்திகள் அங்கிருந்து அடிக்கடி வெளியாகி வருகின்றன. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் பிற்படுத்தப்பட்ட இனப் பெண்கள் சமைத்த உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என்று கூறி, அந்தக் கிராமத்தில் இருக்கும் வேறோர் இனத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்களின் பிள்ளைகளை அந்தப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர் என்ற செய்தி கடந்த வியாழனன்று வெளியானது. இந்த 21ம் நூற்றாண்டில் மனிதர்களுக்கு இப்படியும் ஒரு முகவரியா என்று, இச்செயல் வருத்தப்பட வைக்கின்றது. கடந்த வெள்ளியன்று தினத்தாள் ஒன்றில் வெளியான ஒரு சித்ரவதைச் செய்தியும் நமது நெஞ்சைப் பிழிந்தெடுத்தது. அதைச் சுருக்கமாகச் சொல்கிறோம்.
மத்திய பிரதேச மாநிலத்தின் பராசிரி டயோண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சீமா. இவள் பள்ளிக்குச் சென்று வந்த போதே 16 வயதில் திருமணமும் நடந்தது. அத்துடன் புகுந்தவீட்டின் கொடுமைகளும் ஆரம்பமாயின. புகுந்த வீட்டார் வரதட்சணையாகக் கேட்ட சில ஆயிரங்கள், கலர் டிவி, பைக், வேளாண்மைக்கு டிராக்டர் என ஒவ்வொன்றாக வாங்கிக் கொடுத்தார் சீமாவின் தந்தை. இவ்வளவையும் இலட்சக்கணக்கில் கடன்பட்டு வாங்கிக் கொடுத்த தந்தையிடம், மீதமிருந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் பறித்துக் கொண்டது அக்குடும்பம். இதன்பிறகாவது சீமாவை வதைப்பது குறையும் என்றால் அதுதான் இல்லை. சீமாவை மாட்டுத் தொழுவத்தில் அடைத்து, வருவோர் போவோருக்கெல்லாம் பாலியல் ரீதியாக விருந்தாக்கியது அக்குடும்பம். இதில் உச்சக்கட்டம் என்னவென்றால், பக்கத்து வீட்டிலுள்ள ஒரு நண்பனிடம் மனைவியை ‘வாடகை’க்கு விட்டான் கயமைக் கணவன். இப்படியே 2 ஆண்டுகள் கழிந்தன. பின்னர் உறவினர் ஒருவருடன் அனுப்பி வைத்தான் அவன். அவரும் அந்தப் பெண்ணை சிலமுறைப் பலாத்காரம் செய்தார். அப்போது அந்த வீட்டுக்கு வந்த ஒரு புதிய ஆள், உனது தந்தை என்னிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார் என்று கூறி, அவனும் சீமாவைக் கூட்டிச் சென்று சில மாதம் வைத்திருந்தான். அங்கு சீமாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவள் நிலையை அறிந்த பக்கத்து வீட்டுக்காரன், மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்லி, கூட்டிப்போகும் வழியிலேயே சீமாவைப் பாலியல் கொடுமை செய்தான். பின்னர் சீமாவை மருத்துவமனையில் விட்டு விட்டுத் தப்பித்து விட்டான். பின்னர் மருத்துவமனையில் தற்செயலாகப் பார்த்த ஓர் உறவினர் வழியாக தற்போது சீமாவுக்கு மீட்புக் கிடைத்துள்ளது.
மாட்டுத்தொழுவத்தில் மருமகளை அடைத்து வைத்து, வந்தவர் போனவர்க்கெல்லாம் மூன்றாண்டுகள் விருந்தாக்கிய இந்த மாமனார் குடும்பத்தின் இதயமற்ற செயல், அன்புள்ளங்களே, உங்கள் இதயத்தையும் ஏதாவது செய்திருக்க வேண்டும். இந்த 21ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு கொடுஞ்செயலா? என்று எண்ணத் தோன்றுகின்றது. இரத்தம் சிந்தல்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் தொடர்கின்றன. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் நடக்கும் இரத்தும் சிந்தும் வன்முறைகள் ஏறக்குறைய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை செய்திகளிலும் இடம் பெற்று விடுகின்றன. வட நைஜீரியாவில் ஜோஸ் நகரத்திற்கு அருகே ஆயுதம் தாங்கிய முஸ்லீம் தீவிரவாதக் கும்பல்கள் இச்சனிக்கிழமை காலை, கிறிஸ்தவக் கிராமங்களைச் சூறையாடியதில் குறைந்தது 37 பேர் இறந்தனர். இதில் இறந்தவர்களை அடக்கம் செய்து கொண்டிருந்த போது இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. கணனி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்குச் சமுதாயம் போய்க் கொண்டிருக்கும் இன்றைய அறிவியல் உலகத்தில், இன்றும் இதயமில்லாத, ஈர நெஞ்சமில்லாத மனிதமற்ற வன்செயல்கள். தூய பேதுரு தனது முதல் திருமடல், 3ம் பிரிவில் சொல்கிறார் ...
வாழ்க்கையில் இன்பம் காணவும் நல்ல நாள்களைக் காணவும் விரும்புவோர், தீச்சொல்லினின்று தம் நாவைக் காத்துக்கொள்க! வஞ்சகமொழியைத் தம் வாயை விட்டு விலக்கிடுக! தீமையை விட்டு விலகி நன்மை செய்க! நல்வாழ்வை நாடி, அதை அடைவதிலே கருத்துக் கொள்க! ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைச் செய்வோருக்கு எதிராக இருக்கின்றது.
வாழ்க்கையில் இன்பத்தையும், நல்ல நாள்களையும் உண்மையிலேயே அனுபவிக்க விரும்புவோர், தீமையை விட்டு விலகி நன்மை செய்ய வேண்டும் என்ற அருமையான அறிவுரையைச் சொல்கிறார் புனித பேதுரு. வாளை எடுப்பவர்கள் வாளால்தான் மடிகிறார்கள். வன்முறைச் செயல்களைச் செய்பவர்கள் நிம்மதியாக வாழ்வதாகக் கேள்விப்படுவதில்லை. தவறிழைப்பவர்கள் தண்டனையிலிருந்து தப்பியதாகவும் தெரியவில்லை. ஒருவேளை சிறைத் தண்டனை பெறாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவனின் நீதித் தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையில் நிம்மதியிழந்து எது எப்பொழுது நடக்குமோ என்ற அச்சத்துடன்தான் வாழ்கிறார்கள். ஏனெனில் ஆண்டவரின் முகம் தீமைச்செய்வோருக்கு எதிராக இருக்கின்றது என்று பேதுரு எழுதியிருக்கிறார். 16 வயது சீமாவைக் கொடுமைப்படுத்திய அத்தனை பேரும் இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பது ஊடகச் செய்தி. எனவே இதயத்தில் ஈரம் உள்ளவர்களாய்க் கடவுளின் நியாயத் தீர்ப்புக்கு அஞ்சி வாழ்வோரே வாழ்க்கையில் இன்பம் கண்டு நல்ல நாள்களைக் காண்பார்கள்.
இரண்டாம் உலகப் போரில் சுமார் ஆறு இலட்சம் யூதர்கள் உயிரிழக்கவும் இன்னும் பல கொடுமைகளுக்கும் காரணமானவர் ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். இவர் யூதர் ஒருவரின் உயிரை காப்பாற்றியிருப்பதற்குச் சான்று கிடைத்திருப்பதாக இஞ்ஞாயிறன்று ஓர் ஊடகத்தில் செய்தி வெளியானது. அந்தச் செய்தியுமே கேள்விக்குறியோடுதான் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு ஹிட்லர் நடத்திய கொடுமைகள் இருந்தன. முதலாம் உலகப் போர்க் காலத்தில், கட்டளையிடும் அதிகாரியாக இருந்த யூத இனத்தவர் ஒருவரின் உயிரை இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஹிட்லர் காப்பாற்றியிருக்கிறார் என்பதைக் காட்டும் கடிதம் ஒன்று ஜெர்மனியில் கிடைத்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. கல்லுக்குள் ஈரம் போலும்.
அன்பர்களே தூய பேதுருவின் அறிவுரையை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம். வாழ்க்கையில் இன்பம் காணவும், நல்ல நாள்களைக் காணவும் விரும்புவோர், தீமையை விட்டு விலகி நன்மை செய்ய வேண்டும். தீச்சொல்லினின்று தம் நாவைக் காத்துக்கொள்ள வேண்டும். வஞ்சகமொழியைத் தம் வாயை விட்டு விலக்கிட வேண்டும். இறைவனுக்கும் அவரது கட்டளைகளுக்கும் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டும். இறைவனுக்கு நம் வாழ்க்கையிலிருந்து விடுப்புக் கொடுத்துவிடக் கூடாது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் இந்தக் கருத்தையும் வலியுறுத்தியிருக்கிறார். ஐரோப்பியர்கள் கோடை விடுமுறையில் இருக்கும் இந்நாள்களில் இறைவனை மறந்து விடாமல் ஞாயிறு திருப்பலிக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
RealAudioMP3 அது ஓர் அழகான அரண்மனை. அங்கே ஒரு மூலையில் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. அந்தக் குருவிக்கு குஞ்சு ஒன்று பிறந்தது. அதே நாளில் மன்னருக்கும் மகன் பிறந்தான். இருவரும் வளர்ந்தார்கள். அரசனின் மகன் குருவிக் குஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஏதோ கோபம். அந்தக் குஞ்சின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டான். ஆத்திரமடைந்த தாய்ப் பறவை பாய்ந்து சென்று அரசகுமாரனின் கண்களைக் கொத்தியது. அவன் பார்வை இழந்தான். பின்னர் மன்னர் அந்தத் தாய்ப்பறவையைச் சந்தித்து, “ஒரு குற்றம் நடந்து விட்டது. அதற்கானத் தண்டனையும் கிடைத்து விட்டது. இனி நாம் அதை மறந்து விட்டு சமாதானமாகப் போகலாம்” என்று சொன்னார். அதற்கு அந்தப் பறவை, “ஒரு சமயம் ஒருவனுக்குத் தீமைச் செய்துவிட்டு இன்னொரு சமயம் அவன்மீதே நம்பிக்கை வைப்பவன் இறுதியில் ஏமாற்றத்தையே சந்திப்பான். நமக்கிடையே நடந்ததை இனி நீங்களோ நானோ முற்றிலுமாக மறந்து விடுவது என்பது இயலாத காரியம். இனிமேல் நான் எவ்வளவுதான் விசுவாசமாக நடந்து கொண்டாலும், உமக்குள்ளே ஏற்பட்டுவிட்ட பகையுணர்வு மறையாது. அதே மாதிரி நீர் எவ்வளவுதான் நல்லவிதமாக நடந்து கொண்டாலும் உமது செயல்களில் எனக்குச் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எனவே இந்த இடத்தில் தங்குவது எனக்கு நல்லதல்ல. தீமை செய்த இடத்தில் திரும்பவும் ஆதரவை நாடக் கூடாது. நான் வருகிறேன்” என்று சொல்லி அந்தப் பறவை பறந்து போனது. அரசனுக்கு ஓர் உண்மை புரிந்தது. ஒரு சண்டையை நிறுத்துவதற்கு அதனைத் தொடங்காமலே இருந்துவிடுவதுதான் சிறந்தது.
ஆம். தீமையாலும் தீச்சொற்களினாலும் துன்புறுவதைவிட அவற்றைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது. வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? தீமையையும் தீயச் செயல்களையும் தீயச் சொற்களையும் விலக்கி நடப்போம்.







All the contents on this site are copyrighted ©.