2012-07-07 15:43:46

கப்பலில் வேலை செய்வோர் முதலில் மனிதர்கள் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் – திருப்பீட குடியேற்றதாரர் அவை


ஜூலை07,2012. உலக அளவில் கப்பல்களில் வேலை செய்யும் 12 இலட்சத்துக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, அவர்களின் வேலையிடங்களில் தரமான சூழல்கள் உருவாக்கிக் கொடுக்கப்படுமாறு திருப்பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜூலை8, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் கடல் ஞாயிறு தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கானத் திருப்பீட அவை, அனைத்து மக்களின் வாழ்க்கை மிகவும் வசதியாக அமைவதற்கு உதவும் கப்பலில் வேலை செய்வோர் முதலில் மனிதர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் வேலைகள் மற்றும் அவர்கள் செய்யும் தியாகங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளது.
தங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களைவிட்டுப் பல மாதங்கள் பிரிந்து வாழும் இவர்கள் செல்லும் நாடுகளில், நிறம், மதம், நாடு என்ற வேறுபாடின்றி வரவேற்கப்பட வேண்டுமென்றும் இச்செய்தி வலியுறுத்துகிறது.
தாராளமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகில் கப்பல் போக்குவரத்து மிக முக்கிய அங்கம் வகித்தது எனக் கூறும் இச்செய்தி, இன்றும்கூட உலகளாவிய வர்த்தகத்தில் 90 விழுக்காடு கப்பல் போக்குவரத்தால் நடத்தப்படுகின்றன என்றும், இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கப்பலில் பயணம் செய்கின்றனர் என்றும் சுட்டிக் காட்டுகிறது.
2006ம் ஆண்டின் கப்பல் தொழில் ஒப்பந்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று அழைப்பு விடுக்கும் இச்செய்தி, கடல் சார்ந்த தொழில் செய்வோர்க்கென வருகிற நவம்பர் 19 முதல் 23 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 23வது அனைத்துலக மேய்ப்புப்பணி மாநாட்டில் கப்பல் பணியாளர்கள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

“கடல்சார்ந்த உலகில் புதிய நற்செய்திப்பணி” என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறும் என்று கூறும் இச்செய்தி, இத்தொழிலாளரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களுக்கானச் சிறப்பான மேய்ப்புப்பணியில் திருஅவை ஈடுபட்டுள்ளது என்றும் கூறுகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 2ம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் கடல் தினத்திற்கென வெளியிடப்பட்ட செய்தியில் குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கானத் திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò மற்றும் அதன் செயலர் ஆயர் Joseph Kalathiparambil கையெழுத்திட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.