2012-07-06 15:57:21

லிபியா நாட்டினரை நம்ப வேண்டும் - லிபியா அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Martinelli


ஜூலை06,2012. லிபியா நாட்டு வரலாற்றில், உண்மையான சுதந்திரத் தேர்தல்கள் முதன்முறையாக நடைபெறவிருக்கும்வேளை, அத்தேர்தல் நேரத்தில் எதுவும் பிரச்சனைகள் எழுந்தால் அவை குறித்து உலக சமுதாயம் வியப்படையத் தேவையில்லை என்று Tripoli ன் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறினார்.
லிபியாவில் இச்சனிக்கிழமையன்று இடம்பெறும் பொதுத் தேர்தல்கள் குறித்து Fides செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஆயர் Martinelli, லிபிய மக்களை நாம் நம்ப வேண்டும் என்று கூறினார்.
ஜூலை 7ம் தேதி நடைபெறும் தேர்தலில் 200 பிரதிநிதிகள் லிபியாவின் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அவர்கள் புதிய இடைக்கால அரசையும், புதிய அரசியல் அமைப்பை எழுதுவதற்கான ஆணையத்தையும் அமைப்பார்கள். இந்தத் தேர்தலில் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மூவாயிரத்துக்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 27 இலட்சம் பேர் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.
மேலும், கடந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் லிபியாவில் இடம்பெறவிருக்கும் முதல் பொதுத் தேர்தலுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், “மக்களாட்சியை நோக்கிச்” செல்லும் இந்த வட ஆப்ரிக்க நாட்டுக்கு ஐ.நா. தனது முழு ஆதரவை வழங்கும் என்று உறுதி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.