2012-07-05 16:24:50

'சுதந்திரத்தின் 15 நாட்கள்' இறுதித் திருப்பலியில் பிலடெல்பியா பேராயரின் மறையுரை


ஜூலை,05,2012. இறைவனுக்குக் கீழ்ப்படிவது என்ற அடிப்படைச் சுதந்திரத்தை எந்த ஓர் அரசும் தரவோ, பெறவோ முடியாது என்று அமெரிக்கப் பேராயர் ஒருவர் கூறினார்.
ஜூன் 21ம் தேதி முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இரு வாரங்களாய் நடைபெற்ற 'சுதந்திரத்தின் 15 நாட்கள்' என்ற போராட்டத்தின் இறுதி நாள் ஜூலை 4, இப்புதனன்று கொண்டாடப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுதந்திர நாளன்று முடிவடைந்தது.
இந்தப் போராட்டத்தின் இறுதித் திருப்பலி வாஷிங்க்டன் நகரில் உள்ள அமல அன்னை தேசியத் திருத்தலத்தில் நடைபெற்றது. இத்திருப்பலியில் மறையுரையாற்றிய பிலடெல்பியா பேராயர் Charles Chaput, உண்மையானச் சுதந்திரத்தை அடைய செல்வம், புகழ், இன்பம் என்ற பல வாழ்க்கைக் கூறுகளையும் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் என்று கூறினார்.
“சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற விவிலிய வார்த்தைகளின் அடிப்படையில் தன் மறையுரையை வழங்கிய பேராயர் Chaput, மனிதர்களால் படைக்கப்பட்ட உலக அரசுகள் மனசாட்சிக்கும், இறைவனின் விருப்பத்திற்கும் எதிராகச் செயல்படுவதை நாம் சகித்துக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.
மனசாட்சிக்கு எதிராக இயற்றப்படும் அரசு ஆணைகளுக்கு பணியாமல், இறைவனுக்கு உகந்ததை இறைவனுக்கே வழங்க வேண்டும் என்று பேராயர் Chaput அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.