2012-07-04 15:44:54

செப்டம்பர் மாதம் லெபனான் நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் அப்போஸ்தலிக்கப் பயணத்தின் விவரங்கள்


ஜூலை,04,2012. செப்டம்பர் மாதம் 14 முதல் 16 முடிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனான் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் அப்போஸ்தலிக்கப் பயணத்தின் விவரங்கள் இச்செவ்வாயன்று வெளியாயின.
2010ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற மத்திய கிழக்கு ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் தீர்மானங்களைத் திருத்தந்தை கையொப்பமிட்டு, அப்பகுதி ஆயர்களுக்கு வழங்கும் முக்கிய நிகழ்வுக்காக இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
செப்டம்பர் 14 வெள்ளி காலை, உரோம் நகர் சம்பினோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, மதியம் 1.45 மணியளவில் லெபனான் தலைநகர் Beirut சென்றடைவார். விமானதளத்தில் அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், அவர் Harissa எனுமிடத்தில் உள்ள புனித பவுல் பசிலிக்காவிற்குச் சென்று, அங்கு ஆயர்கள் மாமன்ற தீர்மானங்களில் கையெழுத்திடுவார்.
ஜூலை 15 சனிக்கிழமையன்று லெபனான் அரசுத் தலைவர் மாளிகையில் அரசுத்தலைவர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்தபின், அந்நாட்டில் உள்ள இஸ்லாம் மதத் தலைவர்களையும் சந்திப்பார்.
இச்சந்திப்புக்களுக்குப் பின், அந்நாட்டின் அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், மற்றும் கலாச்சாரப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு திருத்தந்தை உரை வழங்குவார். அன்று மாலை 6 மணியளவில் Bkerke எனுமிடத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் இளையோரைச் சந்தித்து உரையாற்றுவார்.
செப்டம்பர் 16 ஞாயிறன்று Beirut பெருநகர் மையத்தில் அமைத்துள்ள மற்றொரு திறந்தவெளியரங்கில் காலை 10 மணிக்கு திருப்பலி ஆற்றும் திருத்தந்தை, அதன்பின் அங்கு கூடியிருப்போருக்கு மூவேளை செப உரை வழங்கி அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளிப்பார்.
அன்று மாலை 5 மணியளவில் அந்நகரில் கிறிஸ்துவ ஒன்றிப்பு கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் திருத்தந்தை, மாலை 7 மணியளவில் லெபனான் நாட்டை விட்டுக் கிளம்பி, இரவு 9.40 மணியளவில் உரோம் சம்பினோ விமான நிலையத்தை வந்தடைவார்.








All the contents on this site are copyrighted ©.