2012-07-03 14:34:18

மாநில அரசுக்கு எதிராக மத்தியப்பிரதேசக் கத்தோலிக்கத் தலத் திருஅவை தொடுத்திருந்த வழக்கை மீண்டும் பெற்றுக்கொண்டது


ஜூலை03,2012. மத்தியப்பிரதேச மாநில அரசுக்கு எதிராக கத்தோலிக்கத் தலத் திருஅவை தொடுத்திருந்த வழக்கை மீண்டும் பெற்றுக்கொண்டதாக இச்செவ்வாயன்று அறிவித்தது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள மாணவ, மாணவியர் சூரிய வழிபாட்டில் ஈடுபட வேண்டுமென்று அரசு ஆணை பிறப்பித்ததை அடுத்து, தலத் திருஅவையும், இஸ்லாமிய அமைப்புக்களும் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தன.
மாநில அரசு இவ்வாணையை விலக்கிக் கொள்வதாகவும், விருப்பமுடையோர் மட்டுமே இந்த முயற்சியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்ததாலும், தலத் திருஅவை வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.
மாணவர்களின் உடல் நலனை வளர்ப்பதற்கு யோகா பயிற்சியும், சூரிய வழிபாடும் நடத்தவேண்டும் என்று 2007ம் ஆண்டு மாநில அரசு ஆணை பிறப்பித்தபோது, இஸ்லாமியர் இவ்வாணையை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கைத் தொடர்ந்து, இந்த முயற்சிகள் ஒவ்வொருவரின் சொந்த விருப்பப்படி நடைபெறலாம் என்று அரசு அறிவித்தது.
தற்போது, ஒரே நாளில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் சூரிய வழிபாட்டில் ஈடுபட்டனர் என்ற உலகச் சாதனையை நிகழ்த்தி, கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று மாநில அரசு இந்த ஆணையைப் பிறப்பித்தது என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சூரிய வழிபாடு தங்கள் மதக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று சிறுபான்மையினரான கத்தோலிக்க, கிறிஸ்தவ, இஸ்லாமியரின் பள்ளிகள் இந்த ஆணையை எதிர்த்தன.








All the contents on this site are copyrighted ©.