2012-07-03 14:34:05

இந்தியாவில் திருஅவை நிறுவனங்களை நடத்துவதற்குப் பொதுநிலையினர் ஆர்வம்


ஜூலை03,2012. இந்தியாவில் ஆயர்களும் அருட்பணியாளர்களும் ஆன்மீகப்பணியில் மட்டும் ஈடுபட வேண்டுமெனவும், பள்ளிகளையும், மற்ற திருஅவை நிறுவனங்களையும் பொதுநிலை விசுவாசிகள் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென்றும் இந்திய கத்தோலிக்கப் பொதுநிலை விசுவாசிகளின் முதல் மாமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
15 வட இந்திய மறைமாவட்டங்களிலிருந்து ஏறக்குறைய 100 பிரதிநிதிகள் புதுடெல்லியில் கலந்து கொண்ட மாமன்றத்தில் இவ்வாறு கூறப்பட்டது என UCA செய்தி நிறுவனம் கூறியது.
AICU என்ற அனைத்திந்திய கத்தோலிக்க கழகமும், டெல்லி உயர்மறைமாவட்ட கத்தோலிக்கக் கழக கூட்டமைப்பும் இணைந்து நடத்திய இந்த மாமன்றம், கத்தோலிக்கரின் உரிமைகள் மற்றும் கடமைகளைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டது.
இந்த மாமன்றம் குறித்துப் பேசிய AICU கழகத்தின் உதவித் தலைவர் Eugene Gonsalves, அனைத்து மாநில ஆலோசனை அமைப்புகளில் கலந்து பேசப்பட்ட பின்னர் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை அந்தந்த மாநில ஆயர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த ஆலோசனை மாமன்றங்கள் 2013ம் ஆண்டு பிப்ரவரியில் முடிவடையும் என்றும் Gonsalves தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.