2012-07-02 15:12:25

திருத்தந்தையின் மூவேளை செப உரை : இயேசு மனிதரின் இதயங்களைக் குணப்படுத்த வந்தார்


ஜூலை,02,2012. நாம் நமது அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து குணப்படுத்தப்படுமாறு இறைவனிடம் செபிக்கின்றோம், அது சரியானதே, ஆயினும் நாம் விசுவாசத்தில் உறுதியாய் இருக்குமாறு இறைவனிடம் விரும்பிக் கேட்கவேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நாம் விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதற்காகச் செபிக்கும்போது நமதாண்டவர் நமது வாழ்வைப் புதுப்பிக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்பதிலும், அவரது அன்பிலும் பராமரிப்பிலும் உறுதியான நம்பிக்கை வைக்கவும் இது உதவுகின்றது என்று கூறினார்.
யாயிர் என்பவரது மகள், இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஆகிய இரண்டு பெண்களையும் இயேசு குணமாக்கிய நிகழ்ச்சி குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் விளக்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனிதத்துன்பங்களையும் உடல்நோய்களையும் இயேசு குணமாக்கியதோடு, மனித இதயங்களையும் குணமாக்கி அவற்றுக்கு மீட்பளிக்க வந்தார் என்பதையும் இவ்விரு புதுமைகளும் விவரிக்கின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.
நலவாழ்வுப் பணியாளர்கள் மனிதரின் ஒருங்கிணைந்த நலவாழ்வில் அக்கறை காட்டுவதற்கு இவ்விரு புதுமைகளும் தூண்டுகின்றன என்றும் உரைத்த திருத்தந்தை, இந்த விலைமதிப்பில்லா நலப்பணியில் தொழில்ரீதியாகத் தேர்ச்சி பெற்றிருப்பதும் மட்டும் போதாது, அத்துடன் நல்ல இதயம் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
நமது விசுவாசப் பயணத்திலும், அன்பை நடைமுறைப்படுத்துவதற்கான நமது அர்ப்பணத்திலும் அன்னைமரியாவின் உதவியை நாடுவோம் என்று அழைப்பு விடுத்து இம்மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.