2012-07-02 15:14:08

இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் ஆர்வம்


ஜூலை,02,2012. இலங்கையில், இறுதிகட்ட போருக்குப் பின், தமிழகத்தின் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள, இலங்கைத் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழக புலம்பெயர்ந்தோர் முகாமிலிருந்து 1,557 குடும்பங்களைச் சேர்ந்த 5,058 பேர், சொந்த நாடு திரும்பியுள்ளனர். இலங்கையிலிருந்து, தமிழர்கள் புலம்பெயர்ந்தோராக வருவது முற்றிலுமாக நின்றுபோயுள்ளது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரினால், இலட்சக்கணக்கான தமிழர்கள், புலம்பெயர்ந்தோராக தமிழகத்துக்குத் திரும்பினர். கடந்த 1983ம் ஆண்டில், போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, 3 லட்சத்து 4,080 தமிழர்கள், புலம்பெயர்ந்தோராக மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில், 26 மாவட்டங்களில், 112 புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மற்றும் இரண்டு சிறப்பு முகாம்களில், தற்போது, 67 ஆயிரத்து 930 இலங்கை தமிழர்கள், புலம்பெயர்ந்தோராக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த, 2002ம் ஆண்டில் இருந்து, இந்தாண்டு மே மாதம் வரை 3,138 குடும்பங்களைச் சேர்ந்த, 10 ஆயிரத்து 594 பேர், இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் வாழும், புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளுக்கான படிப்புகள் அனைத்தும், இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பை பொறுத்தவரை, நீதிமன்ற உத்தரவுப்படி, பொறியியல் கலந்தாய்வு மூலம், பொது ஒதுக்கீட்டில், இலங்கை மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்தாண்டு 14 பேர், கலந்தாய்வு மூலம் தேர்வாகியுள்ளனர். தனியார் கல்லூரியில், ஒன்பது பேர் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு, 38 பேர் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.