2012-06-30 15:40:58

புதிய பேராயர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினர்களுக்குத் திருத்தந்தை வாழ்த்து


ஜூன்30,.2012. முக்கிய திருவழிபாடுகளின்போது பேராயர்கள் அணியும் Pallium என்ற கழுத்துப்பட்டை, கிறிஸ்துவோடும் பேதுருவின் வழித்தோன்றலோடும் அவர்கள் கொண்டிருக்கும் ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது, இத்தகைய ஒன்றிப்பானது ஒவ்வோர் உயர்மறைமாவட்ட விசுவாசிகளின் இதயங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவாகிய இவ்வெள்ளியன்று Pallium பெற்ற உலகின் 43 புதிய பேராயர்கள் மற்றும் அவர்களின் உற்றார் உறவினரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
பலமொழிகளில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, இப்புதிய பேராயர்களுக்காகத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.
உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் இப்பேராயர்கள் திருஅவையின் உலகளாவிய தன்மையை வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் என்றும், உலகின் அனைத்துக் கண்டங்களில் பல்வேறு மொழிகளில் கிறிஸ்துவை மக்கள் அறியச் செய்து அவரின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தியாவின் குவஹாத்தி பேராயர் John Moolachira, கொல்கத்தா பேராயர் Thomas D’Souza, பங்களாதேஷின் டாக்கா பேராயர் Patrick D’Rozario உட்பட 9 ஆசியர்கள் இவ்வெள்ளியன்று திருத்தந்தையிடமிருந்து Pallium என்ற கழுத்துப் பட்டைகளைப் பெற்றனர்.
கடந்த ஓராண்டில் உலகின் பல பகுதிகளில் நியமனம் பெற்ற 46 பேராயர்களில் எஞ்சியுள்ள மூன்று பேராயர்கள் அவரவர் இடங்களில் இந்தக் கழுத்துப்பட்டையைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.