2012-06-29 15:41:13

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


ஜூன்,29,2012. திருஅவையின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படும் புனிதர்கள் பேதுருவும், பவுலும் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் நற்செய்தியின் முழு வடிவமாக, இணைபிரியாத இருவராகக் கருதப்படுகின்றனர் என்று திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது, பேராயர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு 'Pallium' என்ற கழுத்துப்பட்டைகளைத் திருத்தந்தை வழங்குவது வழக்கம்.
இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது, கடந்த ஓராண்டு நியமனம் பெற்ற 44 பேராயர்களுக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 'Pallium' வழங்கும் திருப்பலியைத் திருத்தந்தை நிகழ்த்தியபோது வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
புனிதர்கள் பேதுருவும், பவுலும் இணைபிரியாதவர்களாகக் கருதப்படுவதைக் குறித்து பேசியபோது, விவிலியத்தில் முதன் முதலாகக் கூறப்பட்டுள்ள காயின் ஆபேல் சகோதரர்களைக் குறித்தும் திருத்தந்தை பேசினார்.
காயினும், ஆபேலும் உடன்பிறந்தவர்களாய் இருந்தாலும், பாவம் அவர்களை வேறுபடுத்தியது, இதற்கு மாறாக, பேதுருவும், பவுலும் பல வழிகளில் வேறுபட்டவர்களாய் இருந்தாலும் கிறிஸ்துவைப் பின்பற்றியதால் இணைபிரியாமல் இணைக்கப்பட்டனர் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இப்பெருநாளன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், கிறிஸ்துவால் 'பாறை' என்றும் 'சாத்தான்' என்றும் பேதுரு அழைக்கப்பட்டதைக் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்த திருத்தந்தை, இயேசு மெசியா என்ற உண்மையை, இறைவனின் தூண்டுதலால் பேதுரு கூறியபோது, அவரைப் பாறை என்றும், மனித அறிவைக்கொண்டு இயேசுவின் பாடுகள் நிகழக்கூடாது என்று பேதுரு சொன்னபோது அவரைச் 'சாத்தான்' என்றும் இயேசு அழைக்கிறார் என்ற தன் எண்ணங்களைக் கூறினார்.
பாறை, உறுதியான அடித்தளமாக அமைய முடியும் என்றாலும், அது நாம் இலக்கு நோக்கிச் செல்லும் பாதையின் நடுவில் கிடந்தால் நம்மைத் தடுமாறி விழச்செய்யும் தடைக்கல்லாகும் என்ற அழகிய உருவகத்தையும் தன் மறையுரையில் திருத்தந்தை பயன்படுத்தினார்.
இத்திருப்பலியில் இணைந்துள்ள பல்வேறு ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பிரதிநிதிகளைக் குறித்தும், வத்திக்கான் பாடகர் குழுவுடன் திருப்பலி பாடல்களை இணைந்து பாடும் Westminster மடத்தின் பாடகர் குழுவைக் குறித்தும் தன் மறையுரையின் துவக்கத்தில் பேசியத் திருத்தந்தை, பல்வேறு சபைகளும் இணைந்து வந்திருக்கும் இந்தப் பெருவிழாவின் புனிதர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை இன்னும் ஆழமாய் இணைக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
தன் மறையுரையின் இறுதியில், பேராயர்களுக்குத் தான் வழங்கும் 'Pallium' என்ற கழுத்துப்பட்டை, கிறிஸ்து என்ற மூலைக்கல் மீதும், பேதுரு என்ற பாறையின் மீதும் கட்டப்பட்டுள்ள திருஅவையை பேராயர்கள் கட்டிக் காக்கவேண்டும் என்பதை நினைவுறுத்தும் ஓர் அடையாளம் என்றுரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.