2012-06-29 15:42:49

நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல பணியாற்றியுள்ள ஒலிம்பிக் வீரர்களைப் பாராட்டும் வகையில் Eric Liddell விருது


ஜூன்,29,2012. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களில் தங்கள் நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் செய்துள்ள பல்வேறு தொண்டுகளின் அடிப்படையில் அவர்களுக்குச் சிறப்புப் பரிசொன்று வழங்கப்படும் என்று கிறிஸ்தவ அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
வருகிற ஜூலை மாதம் இலண்டன் நகரில் ஆரம்பமாகவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி, கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய கிறிஸ்தவ அமைப்புக்களும் இணைந்து 'தங்கத்தையும் தாண்டி' (More Than Gold) என்ற கருத்துடன் சமுதாயச் சிந்தனை மிகுந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.
இந்நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களில் தங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல பணியாற்றியுள்ள வீரர்களைப் பாராட்டும் வகையில் Eric Liddell விருது ஒன்று வழங்கப்பட உள்ளது.
1924 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அப்போதைய 100 மீட்டர் பந்தயத்தின் தலைசிறந்த வீரர் Eric Liddell, அப்பந்தயம் ஞாயிறன்று நடத்தப்பட்டதால், அதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, தனக்குப் பழக்கமில்லாத 400 மீட்டர் பந்தயம் மற்றொரு நாளில் நடைபெற்றதால், அதில் கலந்து கொண்டு தங்கப் பதக்கமும் பெற்றார்.
தன் மதக் கோட்பாட்டுக்காக தனக்கு கிடைக்கவிருந்த உலகப் புகழையும் பெற மறுத்த Eric Liddell நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.