2012-06-28 15:37:42

திருத்தந்தை Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தார்


ஜூன்,28,2012. Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளை இவ்வியாழனன்று காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பாடல் 34ல் காணப்படும் "என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்." என்ற வார்த்தைகளுடன் அவர்களை வரவேற்றார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவின்போது Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் சார்பாக, பிரதிநிதிகள் அடங்கியக் குழுவொன்று வத்திக்கானுக்கு வருவது வழக்கம்.
இப்பிரதிநிதிகள் குழுவினரை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவைக்கும் Constantinople சபைக்கும் விரைவில் முழுமையான ஒன்றிப்பு உருவாக வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான முதலாம் Bartholomew அவர்களுக்குத் தன் தனிப்பட்ட வணக்கங்களைத் தெரிவித்தத் திருத்தந்தை, புனிதர்கள் பேதுருவும், பவுலும் தங்கள் போதனைகளாலும், உழைப்பாலும் கட்டியெழுப்பிய விசுவாசத்தின் வேர்களில் நாம் ஒருமைப்பாட்டைக் காணமுடியும் என்று கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிகழ்ந்ததன் 50ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி முதல் கொண்டாடவிருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தத் திருத்தந்தை, இப்பொதுச்சங்கத்தில் கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஏனைய ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே உரையாடல்கள் ஆரம்பமானதைச் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். என்று திருத்தூதர் பணிகள் 4: 32ல் கூறியுள்ளதுபோல், நாம் அனைவரும் ஒரே பலிபீடத்தில் வழிபாடுகளை இணைந்து நிறைவேற்றும் காலம் விரைவில் வருவதையே தான் விழைவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.