2012-06-28 15:38:34

சிரியாவில் ஒப்புரவை உருவாக்க "Mussalaha" என்ற பல்சமய அமைப்பு முயற்சி


ஜூன்,28,2012. எங்கள் நாடு தன் இரத்தத்தை வீணாக இழந்து வருகிறது. அதிலும் முக்கியமாக, இளையோரை நாங்கள் ஒவ்வோரு நாளும் இழந்து வருகிறோம். எனவே, சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை உடனே நிறுத்தவேண்டும் என்று பல்சமய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
ஒப்புரவு என்ற பொருள்படும் "Mussalaha" என்ற பல்சமய அமைப்பு, மனித சமுதாயத்தின் அடிமட்ட மக்களின் ஆதரவுடன் தன் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இவ்வமைப்பின் தூண்டுதலால், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், பழங்குடி மக்கள் என்ற அனைத்துத் தரப்பைச் சார்ந்தவர்களின் குடும்பங்களும் இணைந்து வரும் முயற்சிகள் சிரியாவில் பரவி வருகிறது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நாட்டில் நடக்கும் வன்முறைகளால் ஒவ்வொரு நாளும் 40 முதல் 100 பேர் இறக்கின்றனர் என்று கூறும் இவ்வமைப்பினர், இவ்விறப்புக்களில் அதிகமானோர் இளையோர் என்பதால், தங்கள் எதிர்காலத்தை இழந்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களும், மிதவாதக் குழுக்களும் இணைந்து வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வரும் இவ்வமைப்பினர், உலக அமைதிக்கென உழைக்கும் பன்னாட்டு அமைப்புக்களின் உதவிகளையும் கோரிவருகின்றனர் என்று Fides செய்தி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.