2012-06-28 15:38:56

ஆப்ரிக்காவில் சமூகப் பணியாற்றும் இயேசு சபையினரின் சிறப்புக் கூட்டம்


ஜூன்,28,2012. ஆப்ரிக்க நாடுகள் விரைவான பொருளாதார முன்னேற்றங்களைக் கண்டு வந்தாலும், எளிய மக்களின் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கும் சவால்களைச் சந்தித்து வருகின்றன என்று இயேசுசபையின் சமூகப் பணி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறினார்.
இஞ்ஞாயிறு முதல் வியாழன் முடிய ஆப்ரிக்காவின் நைரோபியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆப்ரிக்காவில் சமூகப் பணியாற்றும் இயேசு சபையினர், ஆப்ரிக்க நாடுகள் கடந்து வந்துள்ள 50 ஆண்டுகளை மறுபார்வையிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஆப்ரிக்க சமூகப் பணிகளின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Michael Lewis, ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகள் அந்நிய காலனி ஆதிக்கங்களிலிருந்து விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் நிறைவேறும் இக்காலத்தில், அங்கு வாழும் மக்கள் இன்னும் அடிப்படைத் தேவைகளும், எதிர்காலத்தின் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆப்ரிக்க சமுதாயத்தில் இளையோரின் பங்கு, அனைத்துத் துறைகளிலும் நீதியை நிலைநிறுத்துதல் ஆகிய அம்சங்களுக்குத் தேவையான செயல்முறைத் திட்டங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.