2012-06-27 17:03:25

கடத்தலுக்கு ஆளானவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. உயர் அதிகாரி


ஜூன்,27,2012. சட்டவிரோதமாக ஆட்கள் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவது தொடர்பாக அரசுகள் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அப்படிக் கொண்டுசெல்லப்படுவோரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்படும் ஆட்களின் உரிமைகள் - அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் - பாதுகாக்கப்படும் வகையில் அரசுகள் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என மனிதக்கடத்தல் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Joy Ngozi Ezeilo, (the UN Special Rapporteur on Trafficking in Persons, especially Women and Children) Warsawவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எடுத்துரைத்தார்.
வெளிநாடுகளுக்கு ஆட்கள் முறைதவறி கடத்திச்செல்லப்படும் விடயத்தை கிரிமினல் குற்றமாக்குதல் குறித்து, தெளிவான மற்றும் முழுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், அவை ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் அவையில் சமர்ப்பித்த தன் ஆண்டறிக்கையில் Ezeilo கேட்டுக்கொண்டார்.
மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க பல நாடுகளில் சட்டங்கள் வந்துவிட்டன என்றாலும், கடத்தப்படுகின்ற ஆட்களின் உரிமைகள் மதிக்கப்படுவது தொடர்பில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் தற்போதைய சட்டங்களில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மனிதக் கடத்தலைச் செய்பவர்களையும், மனிதக் கடத்தலுக்கு ஆளாக நேர்ந்தவர்களையும் சரியாக இனம் கண்டு, அவர்களை வெவ்வேறு விதமாக நடத்துவதற்குரிய வழிவகைகளை அரசுகள் உருவாக்கவேண்டும் என ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார்.
மனிதக் கடத்தலுக்கு ஆளாக நேருபவர்கள் விரும்பியோ, வற்புறுத்தலின் பேரிலோ, ஏமாற்றப்பட்டோ, சில குற்றங்களைப் புரியநேரிடுகிறது என்றாலும், அவர்களும் ஒரு வகையில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், எனவே அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், அவர்களது துன்பங்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் அவசியம் என ஐ.நா. மனித உரிமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் சொத்துக்களைக் கொண்டு மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் நஷ்டஈடும் வழங்கும் வகையில் சட்ட வழிமுறைகளை அரசுகள் உருவாக்கவேண்டும் என ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Joy Ngozi Ezeilo தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.