2012-06-26 16:48:00

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட்டார் திருத்தந்தை


ஜூன்,26,2012. போர்களால் சிதைக்கப்பட்ட இத்தாலி, மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையாலும், மற்றவரது உதவிகளாலும் தன்னையே மீண்டும் கட்டியெழுப்பியதுபோல், இந்த நில நடுக்கத்தின் விளைவுகளில் இருந்தும் தன்னை மீண்டும் கட்டியெழுப்பும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மே மாதம் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளை இச்செவ்வாயன்று பார்வையிட்ட திருத்தந்தை, நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களையும், திருஅவைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு நாளும் அருள்பணியாளர்கள் சொல்லும் செபங்களைப்பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, கடந்த சில நாட்களாக, திருப்பாடல் 46ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை அருள்பணியாளர்களுடன் இணைந்து தானும் செபித்ததாகக் கூறினார்.
இத்திருப்பாடலில் "கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை." என்று கூறப்பட்டுள்ள வரிகளை மக்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை, இயற்கையின் சீற்றங்களில் இருந்து இறைவன் தங்களைக் காப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிலநடுக்கத்தின்போது, கோவில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அருள்பணியாளர் Ivan Martini அவர்களைப்பற்றி குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, மக்களின் துன்ப துயரங்களில் பங்கேற்று சிறப்புப் பணியாற்றும் குருக்களைப் பாராட்டினார்.
இச்செவ்வாய் காலை 9 மணியளவில் Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயணித்தத் திருத்தந்தை, மீண்டும் 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 1.15 மணியளவில் மீண்டும் வத்திக்கான் வந்தடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.