2012-06-26 16:48:44

ஜூன் 25ம் தேதி ஒப்புரவின் செப நாளையொட்டி, தென்கொரிய ஆயர்கள் விடுத்துள்ள செய்தி


ஜூன்,26,2012. "வட கொரியாவில் வாழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அமைதி உண்டாகுக" என்று தென் கொரிய ஆயர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.
1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே போர் மூண்டது. அந்தப் போர் மூன்றாண்டுகள் நீடித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புரவு உருவாக வேண்டுமென்றும், இரு நாடுகளும் ஒரே நாடாக இணையவேண்டுமென்றும் தென்கொரிய ஆயர்கள் 1965ம் ஆண்டு முதல் ஒரு செப நாளை உருவாக்கினர். ஜூன் 25ம் தேதியை ஓட்டிவரும் ஞாயிறன்று இந்த செப நாள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாண்டு ஜூன் 25ம் தேதியை நெருங்கிவந்த இஞ்ஞாயிறன்று ஒப்புரவின் செப நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, தென்கொரிய ஆயர்கள் விடுத்துள்ள ஒரு செய்தியில் வடகொரிய மக்களுக்கு நிறைவான அமைதி கிடைக்கவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும், செபங்களையும் தெரிவித்துள்ளனர்.
தென்கொரிய ஆயர் பேரவையில் கொரிய மக்கள் ஒப்புரவுப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Peter Lee Ki-Heon கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த செய்தியில், அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகளாய் பிரிந்து கிடக்கும் கொரிய மக்களின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைய இறைவனிடம் வேண்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒப்புரவு செபநாளையோட்டி சிறப்புத் திருப்பலிகளும், செப வழிபாடுகளும், ஊர்வலங்களும் இஞ்ஞாயிறன்று நடத்தப்பட்டன என்று கொரியாவின் பாப்பிறை மறைபரப்புப் பணி கழகங்களின் தலைவர் அருள்தந்தை John Bosco Byeon கூறினார்.








All the contents on this site are copyrighted ©.