2012-06-26 16:49:09

எகிப்தின் புதிய அரசுத்தலைவர் நாட்டுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது - காப்டிக் கத்தோலிக்க ஆயர்


ஜூன்,26,2012. எகிப்து நாட்டில் Muslim Brotherhood என்ற இஸ்லாமியக் கட்சியிலிருந்து Mohammed Mursi அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ஏற்பதற்கு கிறிஸ்தவர்கள் தயக்கம் கொண்டிருந்தாலும், புதிய அரசுத்தலைவர் நாட்டுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று Luxorல் உள்ள காப்டிக் கத்தோலிக்க ஆயர் Joannes Zakaria கூறினார்.
இஞ்ஞாயிறன்று, எகிப்தின் புதிய அரசுத் தலைவராக Mursi அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த ஆயர் Zakaria, புதிய அரசுத் தலைவர் இஞ்ஞாயிறன்று தொலைக்காட்சியில் பேசியபோது கூறிய வார்த்தைகள் நம்பிக்கை தருவதாய் அமைந்தன என்று கூறினார்.
புதிய அரசுத் தலைவர் அமைக்கவிருக்கும் அமைச்சர்கள் அவையில் அனைத்து மதத்தினருக்கும் இடம் அளிப்பார் என்று நம்புவதாகவும் ஆயர் Zakaria தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
Muslim Brotherhood என்ற கட்சி இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இல்லாததால் பல்வேறு வகையில் பேசியிருந்தாலும், தற்போது பொறுப்பில் இருப்பதால், தங்கள் கட்சியின் கொள்கைகளை நாட்டின் நலனுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்வர் என்று எதிர்பாப்பதாகவும் காப்டிக் கத்தோலிக்க ஆயர் Zakaria கூறினார்.








All the contents on this site are copyrighted ©.