2012-06-25 11:55:23

வாரம் ஓர் அலசல் – நீங்கள் தனியாக இல்லை


ஜூன்25,2012. பெண் பார்க்கும் படலம் அது. பெண் வீட்டுக்குச் செல்வதற்காகப் பத்துப் பங்காளிகள் கூட்டாகக் கிளம்பினார்கள். பட்டு வேஷ்டிகளையும் பட்டுச் சேலைகளையும் கட்டிக் கொண்டு அவர்கள் கிளம்பிய அடுத்த நிமிடத்தில் ஒற்றைக் கண் காகம் ஒன்று குறுக்கே போனது. சில வாரங்களுக்கு முன்தான் ஒரு வேடனின் வில் அந்தக் காகத்தின் கண்ணைக் குறையாக்கி விட்டிருந்தது. அந்தக் காகத்தைப் பார்த்தவுடன் அந்தப் பங்காளிகளில் பலரும் கத்தினார்கள். ஐயோ.. ஒற்றைக்கண் காகம் குறுக்கே போய்விட்டது. கெட்ட சகுணம் என்று அந்தக் காகமே கூறிவிட்டது. இந்தப் பெண் நமது மாப்பிள்ளைக்கு ஒத்து வரமாட்டாள். வாருங்கள் திரும்பிப்போய் விடுவோம் என்றார்கள். உடனே அந்தப் பத்துப் பேரில் விவரமான ஒருவர் சொன்னார் : “அந்தக் காகத்திற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றலா இருக்கிறது? அப்படி ஓர் ஆற்றல் அதற்கு இருந்தால் தனக்கு ஒரு கண் போகும் என்ற விடயத்தை முன்பே அறிந்து கொண்டு ஆபத்திலிருந்து தப்பியிருக்காதா” என்று. சிற்றறிவுக்கு எட்டாத நாட்டுப்புற நம்பிக்கைகள். இல்லை, இது நாட்டுப்புற மூடநம்பிக்கை.
இவ்வாறான மூடநம்பிக்கைகள் நாட்டுப்புறத்தில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும், ஏன் பலவிதங்களில் முன்னேறிய சமூகங்களிலும் இருப்பதைக் காண முடிகின்றது. இதில் என்ன வேதனை என்றால் இந்த மூடநம்பிக்கைகளுக்குப் பெரும்பாலும் பெண்களே பலிகடா ஆகிறார்கள். அன்பு நேயர்களே, இத்தகைய மூடநம்பிக்கைகளால் இலட்சக்கணக்கான கைம்பெண்கள் அனைத்துச் சமுதாயங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண் கணவரை இழந்து விட்டால் அவர் எந்த வயதில் இருந்தாலும் வெள்ளைச் சேலை கட்ட வேண்டும், பொட்டு வைக்கக் கூடாது, பூ வைக்கக் கூடாது, நகைகள் போடக் கூடாது, நல்ல காரியங்கள் நடக்கும் போது முன்னால் வரக் கூடாது, இவர்களைப் பார்ப்பதே அபசகுணம் ... இப்படி பல சமூகப் புறக்கணிப்புகள். மூன்று மாதங்களுக்கு முன்னர் திருச்சிக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு சகோதரியின் அப்பா இறந்து விட்டார். அந்த வீட்டில் அவர்களின் அம்மாவுக்கு நடத்தப்பட்ட சடங்குகளை அச்சகோதரி சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்கள். கணவர்களை இழந்த பெண்கள் பல நாடுகளில் இன்றும் கலாச்சார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
எனவே உலகெங்கும் கணவர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் இலட்சக்கணக்கான பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணத்திலும், அவர்கள் எதிர்நோக்கும் அநீதிகளும் ஏழ்மையும் களையப்படும் நோக்கத்திலும் பல்வேறு தரப்பினர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பலனாக, ஐ.நா.பொது அவை, அனைத்துலக கைம்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு, 2010ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி இசைவு தெரிவித்தது. அந்த நாள் ஜூன் 23 என்றும் குறித்தது. எனவே 2011ம் ஆண்டில் முதல் அனைத்துலக கைம்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 1954ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்றுதான் Shrimati Pushpa Wati Loomba என்ற பெண் கைம்பெண் ஆனார். 1997ம் ஆண்டில் கைம்பெண்களுக்கு ஆதரவாக Loomba நிறுவனம் தொடங்கப்படுவதற்கு இவர்தான் தூண்டுகோலாய் இருந்தவர். இந்த Loomba நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்தியாவில் கடும் துன்பங்களை எதிர்நோக்கும் ஆதரவற்ற ஏழைக் கைம்பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்தையே அது கொண்டிருந்தது. ஆனால் இந்தத் துன்பநிலை இந்தியாவில் மட்டுமல்ல, போர்கள், இனப்படுகொலைகள், எய்ட்ஸ் நோய், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் போன்றவற்றால் கணவர்களை இழந்த இலட்சக்கணக்கான ஆப்ரிக்கக் கைம்பெண்களுக்கு, ஐ.நா. உட்பட எந்த நிறுவனங்களும் உதவி செய்வதில்லை என்பதைக் கண்டறிந்தார் Loomba. இதனால் 2005ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்ற பிரிட்டன் முன்னாள் பிரதமர் Tony Blair ன் மனைவி Cherie Blair, அனைத்துலக கைம்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு இலண்டன் நாடாளுமன்றத்தில் பரிந்துரைத்தார். அதன்பின்னர் ஐந்து ஆண்டுகள் பன்னாட்டு அளவிலும் தொடர்ந்து முயற்சித்து வந்தார். இதன் பயனையும் பெற்றார். ஜூன் 23, இச்சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட இந்த அனைத்துலக கைம்பெண்கள் தினத்தையொட்டி Cherie Blair அளித்த பேட்டியில், Loomba கைம்பெண்கள் நிறுவனத்தின் பணிகள் குறித்து விளக்கினார்.
RealAudioMP3 இன்றைய உலகில் சுமார் 24 கோடியே 50 இலட்சம் கைம்பெண்கள் உள்ளனர். இவர்களில் 11 கோடியே 50 இலட்சம் பெண்களும், சுமார் 50 கோடிச் சிறாரும் கடும் ஏழ்மையையும் பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் 6,500 சிறாருக்கும், 27,000 குடும்பங்களுக்கும், இன்னும், ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் 16 நாடுகளில் ஆதரவற்ற கைம்பெண்களின் மூவாயிரம் குழந்தைகளுக்கும் Loomba நிறுவனம் உதவி வருகின்றது. இவ்வாறு விளக்கிய திருமதி Blair, இன்று இந்தப் பெண்கள், நிதி நெருக்கடியைவிட அவர்கள் வாழும் சமுதாயத்தின் கலாச்சாரப் பழக்கங்கள், மூடநம்பிக்கைகள், சமூக இகழ்ச்சிகள் போன்றவற்றால் துன்பப்படுகின்றனர். இவர்கள் சம மாண்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டு பொருளாதார ரீதியாக அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
RealAudioMP3 இலங்கையில் இடம்பெற்ற இனப்போரால், அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 89,000 கைம்பெண்கள் இருப்பதாக, அந்நாட்டு மகளிர் மற்றும் சிறுவர் முன்னேற்ற அமைச்சக அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். கிழக்கு மாநிலத்தில் 49,000 பேரும், வடக்கு மாநிலத்தில் 40,000 பேரும் கைம்பெண்களாக உள்ளனர். அவர்களில் 12,000 பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் 8,000 பேர் குறைந்தது 3 பிள்ளைகளுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரம் பேர் கைம்பெண்களாகியுள்ளனர். இவர்களில் சுமார் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உண்மையில், இலங்கை அரசு, போரில் பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டுள்ளது. கைம்பெண்கள் தங்களது கனவரின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பித்தால், இழப்பீடாக 50,000 ரூபாய்ப் பெறமுடியும். எஞ்சியுள்ளவர்களுக்கு மாதம் 150 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ஓர் ஆளுக்கு ஒரு நாள் உணவுக்குக்கூட போதாது என்று அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
நேபாளத்தில் 40 விழுக்காட்டுக் கைம்பெண்கள், 20 அல்லது அதற்குக் குறைந்த வயதுடையவர்கள். 67 விழுக்காட்டுக் கைம்பெண்கள், மூன்று அல்லது நான்கு பிள்ளைகளைக் கொண்ட 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் 29 விழுக்காட்டினர் கல்வியறிவற்றவர்கள். ருவாண்டா, ஜிம்பாபுவே, கென்யா, உகாண்டா உட்பட பல ஆப்ரிக்க நாடுகளில் பெண்கள், இறந்துபோன அவர்கள் கணவர்களின் சொத்துக்களாக நோக்கப்படுகின்றனர். கணவர்களின் குடும்பங்களிலுள்ள சகோதரர் அல்லது உறவினர்களுடன் பாலியல் உறவு கொள்ள இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதனால் கணவர்களின் ஆவி இந்தக் கைம்பெண்களின் உடலிலிருந்து விரட்டப்படும் என்ற நம்பிக்கை அந்தச் சமுதாயங்களில் இருக்கின்றது. ருவாண்டா நாட்டில் 1994ம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையில் தப்பித்த பல கைம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு மாண்பிழந்தனர். எய்ட்ஸ் நோயையும் பெற்றுக் கொண்டனர். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் 20 இலட்சம் முதல் 35 இலட்சம் வரைப் பெண்கள், போரினால் கைம்பெண்கள் ஆனார்கள். இவ்வுலகிலுள்ள 77 கோடியே 40 இலட்சம் படிப்பறிவில்லாத வயது வந்தோரில் மூன்றில் இரண்டு பாகத்துக்கும் அதிகமானோர் பெண்கள்.
அனைத்துலக கைம்பெண்கள் தினத்தைச் சிறப்பித்த ஐ.நா.வும், பன்னாட்டு அமைப்புகளும், இவ்வாறு பலவகைகளில் துன்பங்களை அனுபவிக்கும் கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் களையப்பட்டு அவர்கள் மனித உரிமைகளை முழுமையாய் அனுபவிக்க வேண்டுமென்றும், அவர்களின் பிள்ளைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களும் அனைத்துச் சலுகைகளையும் பெற வேண்டுமென்றும் இந்த அனைத்துலக நாளில் உலக மக்களைச் சிறப்பாகக் கேட்கிறது. இந்த ஆண்டு இவ்வுலக தினம், “நீங்கள் தனியாக இல்லை” என்ற தலைப்பில் இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது. துன்பத்தில் மூழ்கியிருக்கும் ஒருவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னால் அவருக்கு அவை எவ்வளவோ ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கும். ஏன் நாம்கூட கடும் வேதனையில் இருக்கும்போது நம் அருகில் ஒருவர் வந்து நீ தனியாக இல்லை, நான் உன்னோடு இருக்கிறேன் என்று சொன்னால் அது புண்பட்ட மனதுக்கு எவ்வளவு சுகம் தரும். அன்பர்களே, ஒரு கைம்பெண்ணுக்கு இதைவிட ஆறுதலான சொற்கள் இருக்க முடியாது. “நீங்கள் தனியாக இல்லை” என்று சொல்லி இந்த அனைத்துலக நாள் நடந்து முடிந்து விட்டது. ஆனால் இதனைச் செயல்படுத்த வேண்டியது சமுதாயத்திலுள்ள நம் ஒவ்வொருவரின் தார்மீகக் கடமையாகும்.
இந்தக் கைம்பெண்கள் பொருளாதார ரீதியாக வலிமையாக இல்லாவிட்டாலும் மனரீதியாக வலிமையுடையவர்கள் என்றே புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சொந்தக்காலில் நின்று குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சிக்கும் இந்தப் பெண்களைச் சமுதாயச் சடங்குகளாலும் மூடநம்பிக்கைகளாலும் முடக்கிப் போடாமல் அவர்கள் மறு வாழ்வு பெற உதவுவோம். விதவைஆண்களைப் போல, விதவைப்பெண்களும் மறுவாழ்வு பெற்றுவாழத் தடையாய் இருக்கும் சமுதாயச் சங்கிலிகளைத் தகர்த்தெறிவோம். நம் மத்தியில் கணவர்களை இழந்து வாழும் பெண்களிடம், அவர்கள் தனியாக இல்லை என்ற உணர்வை நமது அன்பும் கரிசனையும் ஆறுதலும் நிறைந்த வார்த்தைகள் மற்றும் செயல்களால் வெளிப்படுத்துவோம். இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், குழந்தை பிறக்காது என எண்ணப்பட்ட வயதான எலிசபெத், புனித யோவானைக் கருத்தாங்கிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, இறைவனால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்று கூறினார்.
RealAudioMP3 கணவர்களை இழந்து நிராதரவாய் நிற்கும் ஏழைத் தாய்மாரே, நீங்கள் தனியாக இல்லை. உங்களோடு இறைவன் இருக்கிறார். உங்களோடு நல்லபல உள்ளங்கள் இருக்கிறார்கள். அன்று புனித பூமிக்குத் திருப்பயணம் செல்வதற்கு ஆவலோடு தயாரித்து வந்தது ஒரு மாணவர் குழு. தங்களது மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்புக்களையும் அக்குழு சார்பாக ஒரு மாணவர் தங்களது போதகரிடம் பகிர்ந்து கொண்டார். இயேசு வாழ்ந்த இடத்தையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றையும் நினைவுகூரப் போகிறோம் என்றார். அதற்குப் போதகர், மன்னிக்க வேண்டும், வரலாற்றை அல்ல, அது அவரது வரலாறு என்றார். போதகர் மேலும் தொடர்ந்தார்... இயேசு என்னோடு நடக்கிறார், அவர் என்னோடு பேசுகிறார், என்மீது அவர் கொண்டுள்ள அன்பைச் சொல்கிறார், நானும் அவரோடு நடக்கிறேன், அவரிடம் பேசுகிறேன், அவரது பேரன்புக்குப் பதில் சொல்கிறேன். அவர் ஒவ்வொரு நிமிடமும் என்னோடு இருக்கும் போது இத்தனை கிலோ மீட்டர்கள் எதற்காகப் பயணம் செய்ய வேண்டும்? பழங்கால நினைவுச் சின்னங்களிலும் இடிந்து போன கட்டிடங்களிலும் புனிதமானது என்ன என்று சொல்லுங்கள் என்று மாணவர்களிடம் கேட்டார். ஆம். நம்மோடு எல்லா நேரங்களிலும் வாழும் தெய்வம் நம்மைத் தனியாக இருக்க விடுவதில்லை. நம்மைக் கைவிடுவதுமில்லை.










All the contents on this site are copyrighted ©.