2012-06-25 14:37:08

இறையழைத்தல்களை உருவாக்குவதில் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது – திருப்பீட ஏடு


ஜூன்,25,2012. குருத்துவத்துக்கான எந்த ஓர் அழைப்பும் இறைவனின் கொடையாக இருந்தாலும், குடும்பங்கள், பங்குத்தளங்கள், கிறிஸ்தவ சமூகங்கள், குருக்கள் ஆகியோர் கிறிஸ்தவ வாழ்வை இக்காலத்தில் வாழ்வதைப் பொருத்தும் குருத்துவத்தின் வருங்காலம் அமைந்துள்ளது என்று திருப்பீடம் இத்திங்களன்று வெளியிட்ட ஏடு கூறுகிறது.
திருப்பீடக் கத்தோலிக்க கல்விப் பேராயமும், குருத்துவ அழைத்தலை ஊக்குவிக்கும் பாப்பிறைப் பணியகமும் இணைந்து, “குருத்துவத் திருப்பணிக்கு அழைத்தல்களை ஊக்குவிப்பதற்கான மேய்ப்புப்பணி வழிகாட்டி” என்ற தலைப்பில் வெளியிட்ட 27 பக்க ஏடு இவ்வாறு கூறுகிறது.
இன்றைய உலகில் இறையழைத்தல்களின் நிலை, இறையழைத்தல் மற்றும் குருத்துவத்தின் தனிப்பண்பு, குருத்துவ வாழ்வுக்கு இறையழைத்தல்களை ஊக்குவித்தல் என மூன்று முக்கிய தலைப்புக்களில் வெளிவந்துள்ள இவ்வேட்டில், மேற்கிலுள்ள பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் பரவி வரும் உலகப்போக்கான மனநிலை இளைஞர்கள் குருத்துவ அழைப்பை புறக்கணிக்க வைக்கின்றது என்று கூறியுள்ளது.
பொது வாழ்க்கையிலிருந்து குருக்கள் மெது மெதுவாக ஓரங்கட்டப்படுதலும், பொது வாழ்வில் குருக்கள் தங்களது வாழ்வின் இயல்பை இழந்து வருவதும், பல இடங்களில் கன்னிமை வாழ்வு கேள்விக்கு உட்படுத்தப்படுவதும், உலகப்போக்கு மனநிலை மட்டுமல்லாமல், திருஅவைக்குள்ளே கன்னிமை வாழ்வு குறித்தத் தவறான கருத்துக்கள் இருப்பதும், இப்படி பல காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது இவ்வேடு.
கடவுள்பற்றிய உண்மையை நேரடியாகப் பெறும் கிறிஸ்தவ அனுபவத்தை சிறுவர்களும் இளைஞர்களும் பெறுவதற்கு இறையழைத்தல் குறித்த மேய்ப்புப்பணிகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தும் இவ்வேடு, இறையழைத்தல்களை உருவாக்குவதில் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை உணரச்செய்ய வேண்டுமென்றும் கூறுகிறது.
இறையழைத்தல்களை ஊக்குவிப்பது, குறிப்பாக, குருத்துவப் பணிக்கென இறைவன் அழைப்பதை வரவேற்பது திருஅவைக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வருகிறது என்றும் அவ்வேட்டின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.