2012-06-23 15:42:35

கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்பட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


ஜூன்23,2012. கணவன்கள் இறந்த பின்னர் பெண்கள் பல்வேறு விதமான இழப்புக்களை எதிர்கொள்ளும்வேளை, கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அழைப்பு விடுத்தார்.
ஜூன்23, இச்சனிக்கிழமை அனைத்துலக கைம்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், வாரிசுரிமை, சொத்துரிமை, சமூகப்பாதுகாப்பு, நலவாழ்வு, கல்வி போன்றவை கைம்பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று கவலை தெரிவித்தார்.
கைம்பெண்கள் பலவகையானப் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர் என்றும், இயற்கைப் பேரிடர்கள், போர்கள் போன்ற சூழ்நிலைகளில் இவர்களின் நெருக்கடிநிலை கவலைக்குரியதாக இருக்கின்றதென்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படவும் அவர்கள் தங்களின் மனித உரிமைகளை முழுமையாய் அனுபவிக்கவும் இந்த அனைத்துலக தினத்தில் ஆவன செய்யவும் உலகினரைக் கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர்.








All the contents on this site are copyrighted ©.