2012-06-23 15:41:36

உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட வேண்டும் : ரியோ+20 மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதி வலியுறுத்தல்


ஜூன்23,2012. உலகின் உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட வேண்டும் என்று ரியோ+20 உலக உச்சி மாநாட்டில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் Odilo Pedro Scherer.
பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் இவ்வெள்ளியன்று நடந்து முடிந்துள்ள ஐ.நா. உச்சி மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரேசில் நாட்டு Sao Paulo வின் முன்னாள் பேராயர் கர்தினால் Scherer இவ்வாறு கூறினார்.
இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மையமாக இருப்பவர்கள் மனிதர்கள் எனவும், ரியோவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முதல் அனைத்துலக உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது போன்று, உறுதியான வளர்ச்சியில் மனிதர்கள் மத்திய இடத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் கர்தினால் Scherer கூறினார்.
இந்த உலகின் ஏராளமான வளங்கள் நியாயமாகப் பகிரப்படுவதற்குத் திருஅவைத் தனது ஆதரவைத் தருகின்றது என்பதை உறுதிப்படுத்திய கர்தினால் Scherer, உணவு, நீர், நலவாழ்வு, கல்வி ஆகிய இவற்றை ஒவ்வொருவரும் கொண்டிருப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் துணிச்சலாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
கருக்கலைப்பைச் சட்டரீதியாக ஊக்குவிப்பது வளர்ச்சிக்குக் கடும் எதிரி என்பதையும் மாநாட்டினருக்கு நினைவுபடுத்திய அவர், மனித வாழ்வுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகிய தாயின் வயிற்றிலே மனித வாழ்வு கொல்லப்படுவதை நலவாழ்வு விவகாரத்தோடு சேர்க்க முடியாது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.