2012-06-22 16:43:25

பெண் சிசுக்கொலைகளும் கருக்கலைப்புகளும் நிறுத்தப்பட மும்பை ஆயர் வேண்டுகோள்


ஜூன்22,2012. வட இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெண் சிசுக்கொலை நடவடிக்கைகள், சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் கொடுமைகளுக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றன என்று மும்பை உயர்மறைமாவட்ட துணை ஆயர் Agnelo Gracias கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் Beed மாவட்டத்தில் பல்வேறு வளர்நிலையில் பெண்சிசுக்கள் கருவிலே கொல்லப்பட்டிருப்பது இந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஆயர் Gracias, நாட்டில் இடம்பெறும் கருக்கலைப்புகள் அதிர்ச்சியூட்டுகின்றன என்று கூறினார்.
மனித வாழ்வு தாயின் வயிற்றில் உருவான நேரமுதற்கொண்டே புனிதமானது என்றுரைத்த ஆயர் Gracias, பெண் சிசுக்கொலைகளும் கருக்கலைப்புகளும் நிறுத்தப்படுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த எட்டு மாதங்களில் கட்டாயக் கருக்கலைப்புகளில் இறந்த 5 பெண் சிசுக்களின் உறுப்புகளைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும், இராஜஸ்தான் மாநில அரசு பெண்சிசுக்கொலைக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்ற போதிலும், அம்மாநிலத்தில் சிறுமிகளைக் கொல்வதற்குப் புதிய வழிமுறைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று அதிகாரிகள் சந்தேக்கின்றனர் என்று UCA செய்தி நிறுவனம் கூறுகிறது.
இராஜஸ்தான் மாநிலத்தின் Jaisalmer மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் கடந்த 12 நாள்களில் மூன்று பெண்குழந்தைகள் புதிரான முறையில் இறந்துள்ளன. இம்மாவட்டத்தில் ஆயிரம் சிறுவர்களுக்கு 849 சிறுமிகள் வீதம் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.