2012-06-22 16:44:13

ஆதி மனிதன் முழு எலும்புக்கூடு இலங்கையில் தோண்டியெடுப்பு


ஜூன்22, 2012. இலங்கையில் சுமார் 37 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதெனக் கருதப்படும் ஆதிமனிதனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று ஃபாஹியங்கல குகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொல்லியல்துறை கூறியுள்ளது.
இலங்கையின் கலுத்துறை மாவட்டத்திலே ஃபாஹியங்கல என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டுவரும் குகையில் இருந்து பலங்கொட மனிதன் (Balangoda Man) என்று சொல்லப்படும் இலங்கையின் ஆதி மனிதனுடைய முழுமையான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியில்துறை மேலும் கூறியது.
ஆனால் இந்தக் குகைகளில் ஏற்கனவே நடந்த அகழ்வாராய்ச்சியில் இங்கே கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் வயதை வைத்துப் பார்க்கும்போது இந்த எலும்புக்கூடு நிச்சயம் 37 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என அகழாய்வுப் பணிகளின் இயக்குனரான நிமல் பெரேரா தெரிவித்தார்.
நத்தை, மட்டி போன்ற ஓடுடைய உயிரினங்களை இவர்கள் உண்டு வாழ்ந்தார்கள் என்றும், உப்பு பற்றி இவர்கள் அறிந்திருந்தார்கள் என்றும் நம்ப இடமிருப்பதுபோல இங்கே கண்டெடுக்கப்பட்ட விஷயங்கள் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தெற்கு ஆசிய மனிதர்கள் இலங்கையில் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறி கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டதற்கான சான்றுகள் இங்கு கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.