2012-06-21 16:10:44

வறியோரின் சார்பில் பணியாற்றுவதில் திருஅவை எப்போதும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது - பேராயர் சுல்லிக்காட்


ஜூன்,21,2012. தனிமனித மாண்பை நிலைநாட்டுவதும், வறுமைப்பட்ட நாடுகளில் நிலவும் சமுதாய, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகின் கவனத்திற்குக் கொண்டுவருவதும் Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டில் தன் பணி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்புதன் முதல் வெள்ளிமுடிய பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும், ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் Web TV Redentor என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
பொருளாதாரம், சமுதாயம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று முக்கியக் கருத்தியல்களிலும் திருஅவை எப்போதும் தனிமனித மாண்பை நிலைநாட்டுவதிலும், வறியோரின் சார்பில் பணியாற்றுவதிலும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது என்று பேராயர் சுல்லிக்காட் கூறினார்.
திருஅவையின் பல்வேறு பிறரன்புப் பணிகள் அமைப்பின் பிரதிநிதிகளும், இன்னும் பல திருஅவை உயர் அதிகாரிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.
நீதியின் அடிப்படையில் செல்வரும் வறியோரும் இணைந்து முன்னேற்றப் பாதையில் நடக்க முடியும் என்பதை உலகத் தலைவர்கள் இம்மாநாட்டில் உணர்வார்கள் என்று நம்புவதாக திருஅவையின் பிறரன்புப் பணிகள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.