2012-06-21 16:11:29

நைஜீரியாவில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுடன் நல்லுறவைக் கொண்டுள்ளனர் - ஆயர் பேரவைத் தலைவர்


ஜூன்,21,2012. நைஜீரியாவில் வன்முறைகளை மேற்கொண்டுவரும் Boko Haram என்ற அடிப்படைவாதக் குழுவினர் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதாக அறிவித்துள்ளபோதிலும், நாட்டில் உள்ள ஏனைய இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுடன் நல்லுறவைக் கொண்டுள்ளனர் என்று நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama கூறினார்.
அண்மைய நாட்களில் Kadunaவிலும், சுற்றுப் பகுதிகளிலும் 40 பேருக்கும் அதிகமானோர் பலியாவதற்குக் காரணமாய் இருந்த வன்முறைகளுக்கு Boko Haram குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Boko Haram என்ற இவ்வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களையும், பிறரையும் அழிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டுவது வேதனையான ஒரு போக்கு என்று கூறிய Jos பேராயர் Kaigama, இவ்வன்முறை கும்பலுக்கு அயல்நாடுகளிலிருந்து நிதி உதவி கிடைத்து வருவது மேலும் அதிர்ச்சியைத் தருகிறது என்று கூறினார்.
நிதி உதவி செய்துவரும் அமைப்புக்களை உடனடியாகக் கண்டுபிடித்து, அவைகளைத் தடைசெய்வது அரசின் அவசரப்பணி என்றும், இதனால் மட்டுமே வன்முறைகளை நாட்டில் நிறுத்தமுடியும் என்றும் பேராயர் வலியுறுத்தினார்.
நைஜீரியாவில் நிகழ்ந்து வரும் வன்முறைகளைக் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று தான் வழங்கிய மறைபோதகத்தின் இறுதியில் எடுத்துக் கூறி, அங்கு அமைதி நிலவ தன் செபங்களை எழுப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.