2012-06-21 16:09:42

திருத்தந்தை : விசுவாச ஆண்டில் கிறிஸ்தவ நிதி உதவி அமைப்புக்களின் பணிகள் விசுவாசத்தின் வெளிப்பாடாக அமைய வேண்டும்


ஜூன்,21,2012. கிறிஸ்தவ பராம்பரியத்தின் தாய்நாடாக விளங்கும் கிழக்குப்பகுதி, வறியோரின் தேவைகளை எப்போதும் நிறைவு செய்துவரும் ஒரு பாரம்பரியத்தை வளர்த்து வந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கீழைரீதி திருஅவைகளின் நிதி உதவி அமைப்புக்களின் கூட்டமைப்பான ROACO என்ற இயக்கத்தின் 85வது கூட்டம் கடந்த இரு நாட்கள் உரோம் நகரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 80க்கும் அதிகமான உறுப்பினர்களை இவ்வியாழன் நண்பகல் வேளையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, உலகில் இன்று நிலவும் பொருளாதாரச் சரிவையும், நிதி உதவி செய்யும் அமைப்புக்களின் பணிகளையும் பற்றி பேசினார்.
புனித பூமியிலும், ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் உள்ள மக்கள் பொருளாதார, ஆன்மீக உதவிகளை நீதியான, முறையான வழிகளில் பெறவேண்டும் என்று 2007ம் ஆண்டு கீழைரீதி திருஅவைகளின் பேராயத்திற்குத் தான் வழங்கிய உரையில் கூறியவற்றை மீண்டும் இச்சந்திப்பில் எடுத்துக் கூறிய திருத்தந்தை, அதே வேண்டுகோளை மீண்டும் ROACO உறுப்பினர்களுக்கு முன் வைப்பதாகக் கூறினார்.
கீழைரீதி திருஅவையின் செயல்பாடுகள் உலகெங்கும் கானப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, வருகிற விசுவாச ஆண்டில் ROACO போன்ற நிதி உதவி அமைப்புக்களின் பணிகள் கிறிஸ்தவ விசுவாசத்தின் வெளிப்பாடாக அமைய வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டு, உறுப்பினர்களுக்குத் தன் ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.