2012-06-20 16:34:01

திருஅவையில் திருப்புமுனைகள் – தத்துவப் போதகர் (1577 - 1656)


ஜூன்20,2012. பரம்பொருளே, உன் அமுதமொழிகளின் வழி நடந்தால் நான் முக்தி அடைவது நிச்சயமே என்று ஓர் ஆன்மீகவாதி கூறிச் சென்றார். மனிதப் பிறவியெடுத்த எல்லாருமே அழியாதப் பேரின்பத்தை அடையவே முயற்சிக்கின்றனர். இதற்காக மனிதர் எத்தகைய தியாகத்தையும் செய்வதற்குத் தயங்குவதில்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நற்செய்திப் பணியாற்றிய புனித பிரான்சிஸ் சேவியரின் வழியைப் பின்பற்றிப் பல வெளிநாட்டு இயேசுசபையினர் இந்தியாவில் மறைப்பணியைச் செய்திருந்தாலும், இந்தியப் பண்பாட்டையும் இந்திய உணர்வுகளையும் புரிந்துகொண்டு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் பண்பாட்டுமயமாக்கலைப் புகுத்தியப் பெருமை இயேசுசபை அருள்தந்தை இராபர்ட் தெ நொபிலியையே சேரும். உரோமன் கத்தோலிக்க பிராமணர் என்று அழைக்கப்படும் அளவுக்குத் தன்னை இந்திய முறைப்படி, இந்து முறைப்படி மாற்றினார். இத்தாலியில் உயர் குடும்பத்தில் 1577ம் ஆண்டு செப்டம்பரில் பிறந்த இராபர்ட் தெ நொபிலி, இரண்டு திருத்தந்தையர்க்கு உறவினர். தனது குடும்பத்துக்காகப் பெரிய காரியங்களைச் சாதிப்பார் என்று பெற்றோர் கனவு கண்டுகொண்டிருக்க, இவரோ இயேசு சபையில் சேர்ந்து 26வது வயதில் குருவானார். ஆப்ரிக்கா, ஜப்பான் மற்றும்பிற கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருந்த மறைபோதகர்களின் துணிச்சலான வாழ்வு இவரைக் கவர்ந்தது. இராபர்ட் தெ நொபிலி, இந்தியாவில் நற்செய்தியை அறிவிக்க விரும்பி, 1605ம் ஆண்டு மே 5ம் நாள் கோவா வந்து சேர்ந்தார். கேரளாவின் கொச்சியில் சிறிது காலம் தங்கிய பின்னர், கலாச்சாரத்தின் மையமாக விளங்கிய கோவில் நகரமான மதுரையை 1606ம் ஆண்டில் வந்தடைந்தார்.

சிவதர்மா என்பவரின் உதவியுடன் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றார் இராபர்ட் தெ நொபிலி. வேதங்கள், புராணங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்திலே இம்மொழிகளைக் கற்றார். “Teacher of Wisdom” அதாவது ‘தத்துவப் போதகர்’ என தன்னை அழைத்துக்கொண்டு, அக்காலத்தில் சமுதாயத்தில் உயர் வகுப்பினராக இருந்த பிராமணர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதில் தீவிரம் காட்டினார். இந்துமத வல்லுனர்களிடம் கிறிஸ்தவத்தின் உண்மையை எடுத்துச் சொல்வதற்காக ஆர்வமுடன் உரையாடலில் ஈடுபட்டார். இந்த நற்செய்தி அறிவிப்புப்பணிக்காக இந்து சந்நியாசி போன்று தோற்றமளிக்க விரும்பினார்.. கிறிஸ்தவமறைக் கோட்பாடுகளைத் தமிழில் விவரிக்க விரும்பி, பல வார்த்தைகளை உருவாக்கினார். வழிபடும் இடத்தைக் குறிப்பதற்கு கோவில் என்றும், விவிலியத்தைக் குறிப்பதற்கு வேதம் என்றும், திருப்பலியைக் குறிப்பதற்கு பூசை என்றும், இன்னும் அருள், பிரசாதம் போன்ற சொற்களையும் புனைந்தார். மொட்டையடித்த தலையுடன் வெள்ளை வேட்டி உடுத்தி, மரக்கட்டை காலணிகளை அணிந்திருந்தார். இந்துமத சந்நியாசிகள் போன்று கையில் ஒரு கோல், ஒரு கமண்டலம் வைத்திருந்தார். காய்கறி உணவையே உண்டார். தரையில் படுத்துறங்கினார். மூவொரு கடவுளைக் குறிக்கும் விதமாக மூன்று முடிச்சுள்ள ஒரு கயிறை அணிந்து கொண்டார்.

இயேசு சபை அருள்தந்தை இராபர்ட் தெ நொபிலியின் இத்தகைய வாழ்வுமுறைக்கு கிறிஸ்தவர் மத்தியிலே எதிர்ப்பு இருந்தது. இவருக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு அப்போதைய திருத்தந்தை 15ம் கிரகரி ஒரு குழுவை ஏற்படுத்தினார், அந்தக் குழு, இவரது நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஒருவிதமான புதுமை இருக்கின்றது என்று கண்டறிந்தது. இதற்கிடையில் இராபர்ட் தெ நொபிலி மக்கள் மத்தியில் சாது எனப் புகழ்பெறத் தொடங்கினார். பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு எதிராய்ப் போதித்தார். நோயுற்றிருந்த சேலம் அரச குடும்பத்தினரை இவர் காப்பாற்றினார். இவரைக் கொல்வதற்கும் சதி நடந்தது. ஆயினும் மதுரை திருமலைநாயக்கரால் காப்பாற்றப்பட்டார். பின்னர் மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு தொடர்ந்து நூல்கள் எழுதினார். இவர் தனது கடைசி காலத்தை மதுரையில் செலவழிக்க விரும்பினார். ஆனால் இவர் மயிலாப்பூரில் தங்கவைக்கப்பட்டார். வயதான காலத்தில் இவருக்கு இலேசாக கண்பார்வையும் மங்கியது. அப்போது இவருக்கு கோழி சூப் கொடுத்தார்கள். ஆனால் அதைக் குடிக்கவில்லை. இறுதிவரை இவர் சைவ உணவையே உண்டார். இறுதியில் இவர் சென்னை-மயிலாப்பூரில் 1656ம் ஆண்டு சனவரி 16ம் நாளன்று தனது 79வது வயதில் இறையடி சேர்ந்தார். சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார். ஆயினும் இவரது கல்லறை தற்போது காணப்படவில்லை என்று சொல்லப்படுகின்றது.

சமஸ்கிருதம் மற்றும் தமிழில் ஆழமானப் புரிதலைக் கொண்டிருந்த முதல் ஐரோப்பியர்களில் இராபர்ட் தெ நொபிலியும் ஒருவர். திருப்பாடல்களையும் பிற செபங்களையும் தமிழில் மொழி பெயர்த்தார். அக்காலத்தில் தமிழில் எல்லாமே கவிதை வடிவில் இருந்தன. அதனை உரைநடைக்குக் கொண்டு வந்தவர் இராபர்ட் தெ நொபிலி. இவர் தமிழில் நாற்பது உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழில் புதிய உரைநடையைத் தொடங்கி வைத்தவர். இத்தகைய பங்களிப்பால் இவர் தமிழ் உரைநடையின் தந்தை என்று அறியப்படுகிறார். மூன்று கவிதை நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவற்றில் ஞானோபதேசக் காண்டம், மந்திரமாலை, ஆத்தும நிர்ணயம், தத்துவக் கண்ணாடி, சேசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை, நீதிச்சொல், புனர்ஜென்ம ஆக்ஷேபம், தூஷண திக்காரம், நித்திய சீவன சல்லாபம், கடவுள் நிர்ணயம், அர்ச். தேவமாதா சரித்திரம், ஞானோபதேசக் குறிப்பிடம், ஞானோபதேசம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றைவிட சமஸ்கிருதத்தில் எட்டு நூல்கள், நான்கு தெலுங்கு நூல்கள் ஆகியவற்றையும் எழுதினார். சமஸ்கிருதத்தில் இவர் எழுதிய ஒரு நூலின் பெயர் 'கிறிஸ்து கீதை'.

தமிழகத்தில் உயர்சாதி மக்களில் 1208 பேரையும், கீழ்சாதி மக்களில் 2675 பேரையும் கிறிஸ்தவர்களாக்கினார். யாழ்ப்பாணத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் கிறிஸ்தவ மறையைத் தழுவச் செய்தார். இவரைப் புனிதர் என்றே மக்கள் அழைத்தனர். ஐரோப்பாவில் பிறந்து இந்திய மொழிகளில், குறிப்பாக, தமிழ் மொழியில் புலமைபெற்று தமிழர் செய்யாமல் இருந்த சாதனையைச் செய்து காட்டியிருப்பவர் இயேசுசபை அருள்தந்தை இராபர்ட் தெ நொபிலி என்ற தத்துவப் போதகர். தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு முறையிலும் புதிய யுக்திகளைப் புகுத்தியவர். அந்தந்தக் கலாச்சாரத்துக்கு ஒத்த வகையில் நற்செய்தியைப் பரப்புவதற்குத் தூண்டுகோலாய் இருந்தவர். பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தலத்திருஅவையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் தத்துவப் போதகர் இயேசுசபை அருள்தந்தை இராபர்ட் தெ நொபிலி.








All the contents on this site are copyrighted ©.