2012-06-19 16:44:11

ஊர் முழுக்க அரசு அதிகாரிகள்; தகர்ந்து போன ஜாதிப்பூசல்கள்: மாற்றத்தை நிகழ்த்திய மாணவர்கள்


ஜூன்,19,2012. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சேசம்பட்டி கிராமத்தில் ஓய்வு நேரங்களில் மாணவர்களே தனிவகுப்பு நடத்தி வருகின்றனர். இதனால், படிப்பவர்களின் எண்ணிக்கையும், அரசு வேலையில் சேர்பவர்களின் எண்ணிக்கையும் அதிரித்து வருவதுடன், ஜாதிப்பூசல்களும் அறவே ஒழிந்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சேசம்பட்டியில் படித்து முடித்த நான்கு முதல்தலைமுறை பட்டதாரிகள், வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில், ஓய்வாக இருந்த நேரங்களில் அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் தனி வகுப்பு எடுத்து வந்தனர்.
வேலை கிடைத்த பிறகும், வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படித்த மாணவர்கள் நடத்தும் வகுப்பு என்பதால் அங்குள்ள பெற்றோர்களே முன் வந்து, தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்த்தனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் இறுக்கமான ஜாதியக் கட்டமைப்பு இருந்த நேரத்தில், தலித் மாணவர்களையும் வகுப்பில் சேர்த்தனர். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் இயல்பு நிலை வளர்ந்து, இன்று அனைத்து ஜாதி மாணவர்களும் இங்கு படிக்கின்றனர்.
மாணவர்களின் இது போன்ற வழிகாட்டுதலின் பலனாக, இன்று ஊரின் மொத்த மக்களில் பாதிபேர் அரசுப் பணிகளில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இன்று சேசம்பட்டியில் 90 விழுக்காட்டு இளையோர் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.