2012-06-18 14:35:24

வாரம் ஓர் அலசல் – “வளர்ச்சிக்கு வறுமை தடைக்கல்லா?”


ஜூன்18,2012. இரண்டு பெரிய புலவர்கள் அந்த மண்டபத்தில் சந்தித்துக் கொண்டார்கள். ஒரு புலவர் மிகவும் அலுத்துக் கொண்டு சொன்னார் : ”நான் வறுமையின் உச்சக்கட்டத்திற்கே போய்விட்டேன். எனது வறுமையைப் போக்கலாம் என்று மன்னரிடம் போய்க் கவிபாடி நின்றேன். அவரோ எனக்கு எதுவும் தரவில்லை” என்று. அதற்கு அடுத்த புலவர், “ஆச்சரியமாக இருக்கிறதே! நேற்றுக்கூட நான் போய்க் கவி பாடி நின்றேன். கைநிறையப் பொன்பொருள் தந்து அனுப்பி வைத்தாரே” என்று சொன்னார். அப்படியா?, அப்படி எதைப் பாடி பரிசு பெற்றாய்? என்று முதல் புலவர் திருப்பிக் கேட்டார். அதற்கு அடுத்த புலவர் அலட்சியமாகச் சொன்னார் : “உனது வறுமையைப் பாடித்தான்” என்று. அன்பர்களே, ஒருவரின் அடித்தள வறுமை, பலருக்கு வருவாய். இன்று வறுமையின் பிடியில் எண்ணற்ற மக்கள் சிக்கியிருக்கிறார்கள்.
வளர்ந்த நாடு என்று சொல்லக்கூடிய இத்தாலியில் சுமார் 5 இலட்சம் சிறார் வறுமையினால் துன்புறுகின்றனர். இன்று உலகில் சுமார் 92 கோடியே 50 இலட்சம் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுள்ளவர்கள். அதாவது ஏழு பேருக்கு ஒருவர் வீதம் நலமாக வாழ்வதற்குத் தேவையான உணவு இல்லாமல் துன்பப்படுகிறவர்கள். உலகில் பசியால் அல்லது பசி தொடர்புடைய காரணங்களால் தினம் சுமார் 25 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அதாவது ஒவ்வொரு மூன்றரை வினாடிகளுக்கு ஒருவர் வீதம் இறக்கின்றனர். இவ்வாறு இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். உலகப்பசி அட்டவணையில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது. இங்கு 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 விழுக்காட்டினர் எடைக்குறைவோடு உள்ளனர். இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை என IFAD என்ற வேளாண்மை வளர்ச்சிக்கான ஐ.நா. நிதி அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவில் வறுமை ஒழிப்பு திட்டங்களைச் செயல்படுத்த 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவும் உலக வங்கி முன்வந்துள்ளது.
இந்த உலகில் ஒவ்வொருவரின் பசியைப் போக்குவதற்குத் தேவையான உணவு உற்பத்தி இருந்தும் பசியால் துன்புறும் மக்கள் கடும் வறுமை நிலைக்கு உட்படுகிறார்கள். தங்களுக்குத் தேவையான உணவை வாங்குவதற்கு அவர்களிடம் போதிய பணம் இல்லை. ஊட்டச்சத்துக்குறைவுடனே தொடர்ந்து வாழ்ந்து வருவதால் அவர்கள் நோயாளிகளாகவும் பலவீனர்களாகவும் ஆகின்றனர். இதனால் அவர்களால் வேலை செய்ய முடிவதில்லை. அந்நிலை அவர்களை மேலும் வறுமைநிலைக்குத் தள்ளி பசியோடு வாழ வைக்கின்றது. இவர்களும் இவர்களது குடும்பத்தினரும் இறக்கும்வரை இந்நிலை நீடிக்கின்றது. இந்தப் பசிக்கொடுமையை அகற்றுவதற்கு ஐ.நா.அதிகாரிகள், நூறுநாள் வேலைத்திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி வேலைக்கு உணவு என்ற நிலையையும் கொண்டுவந்துள்ளனர். பள்ளிகள் கட்டுவது, கிணறு வெட்டுதல், சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளைக் கொடுத்து வருகின்றனர். சிறாருக்கும் கல்விக்காக உணவு என்ற திட்டம் இருக்கிறது. உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றான புருண்டியில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறார் ஊட்டச்சத்து இல்லாமலே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு சிறார்க்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த நாட்டுச் சிறார் பற்றி யுனிசெப் நிறுவனப் பிரதிநிதி Johannes Wedenig விளக்குகிறார் ......
உலகினரின் பசியும் வறுமையும் இந்நிலையிலிருக்க, நிலங்கள் பாலைநிலமாவதைத் தடுக்கும் அனைத்துலக நாள் ஜூன் 17, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உலக நாள் 1995ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. "வளமான, நலமான மண் உனது வாழ்க்கையைப் பாதுகாக்கும் : நிலம், நீர்ச்சத்து இல்லாமல் இருப்பதைத் தடுக்க முயற்சிப்போம்" என்ற தலைப்பில் இந்த நாள் இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உலகில் மிகவும் புதுப்பிக்கப்பட முடியாத வளம் என்று சொன்னால் அது செழிப்பான மண்தான். ஆனால் நிலங்கள் பாலைவனமாகி வருவதால் ஆண்டுதோறும் ஒரு கோடியே இருபது இலட்சம் ஹெக்டேர் நிலம், மண்வளத்தை இழந்து வருகிறது. இந்த அளவானது, சுவிட்சர்லாந்து நாட்டைப் போன்று மூன்று மடங்காகும்.
நிலங்கள் தரிசு நிலங்களாவதால் உலகில் 150 கோடிப்பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்வளத்தைப் பாதுகாப்பது மண்தான். வெப்பநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுப்பதும் மண்தான். ஆதலால் மண்வளம் குறைந்து வருவது அதிகரித்து வரும் இக்காலத்தில், அதனைப் பாதுகாப்பதற்கு சர்வதேச சமுதாயம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன் 20, வருகிற புதனன்று ரியோ டி ஜெனிரோவில் தொடங்கும் ரியோ+20 என்ற உலக உச்சி மாநாடு நிலவளத்தைப் பாதுகாப்பதற்கு முக்கியமான தீர்மானம் எடுக்கும் என்ற நம்பிக்கையை UNCCD என்ற, நிலங்கள் பாலைநிலமாவதைத் தடுக்கும் ஐ.நா. அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Luc Gnacadja கேட்டுள்ளார். மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு அந்தந்த இடத்துச் சமூகங்களை ஈடுபட வைக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முயற்சியையும் இந்த ஐ.நா.அமைப்பு ஊக்குவிப்பதாகவும் இவர் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் 12,300 ஏக்கருக்கும் மேலான காடுகள் ஒவ்வோர் ஆண்டும் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் தேசிய மக்கள் தொகை நெருக்கம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 பேர் வீதம் என்ற நிலையில் இருக்க, இது கேரளாவில் 859 பேராக இருப்பதாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு கூறுகிறது.
தமிழகத்தின் ‘மழை மறைவு‘ பகுதியான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சாத்தான்குளம், ராதாபுரம் தாலுகாக்கள் பாலைவனமாக மாறிவருவதால் இப்பகுதியில் பாதிக்கு மேற்பட்டோர் பஞ்சம் பிழைக்க நகரங்களில் தஞ்சம் புகுந்துவிட்டனர். 2009ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கப்பட்ட நதிநீர்த் திட்டம் இம்மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. விரைவுப்படுத்தப்பட்ட பாசனத் திட்டத்தின்கீழ் தாமிரபரணியிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக கடலில் கலக்கும் 13,758 மில்லியன் கன அடி நீரின் ஒரு பகுதியான 2,725 மில்லியன் கன அடி நீரை வாடிக்கிடக்கும் பகுதிக்குத் திருப்ப 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் தயாரானது. இதற்கு இதுவரை 175 கோடி ரூபாய்ச் செலவாகியுள்ளது. இந்த 2012ம் ஆண்டில் முடியும் எனக் கூறப்பட்ட இத்திட்டத்தில் முதல் இரண்டு கட்டங்களே இன்னும முடியவில்லை என்று ஜூன்16, இச்சனிக்கிழமையன்று செய்தி வெளியாகியிருந்தது.
அன்பு வத்திக்கான் வானொலி நோயர்களே, மண்வளம் செழிப்பாக இருந்தால்தான், வேளாண்மை செழிக்கும். உணவு உற்பத்தி பெருகினால்தான் மக்கள் பசி பட்டினியின்றி வாழ முடியும். இன்று ஆப்ரிக்காவிலும் பிற பகுதிகளிலும் இலட்சக்கணக்கான மக்கள் பசியாலும் ஊட்டச்சத்து இல்லாமையாலும் வாடுவதற்கு உள்நாட்டுப் போர்கள் ஒரு காரணமாக இருந்தாலும், தொடர்ச்சியாக மழை பெய்யாமல் இருப்பதும், அதனால் அறுவடை பொய்த்துப் போவதும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. பசியாலும், போதிய சத்துணவு இல்லாமையாலும் வாடும் இம்மக்களையும் சிறாரையும் யு டியுப்பில் காணும்போது, பல நேரங்களில் வெறும் எலும்புக்கூடு மனிதர்களையே பார்க்க முடிகின்றது. தங்களை நோக்கி வரும் மரணத்தைக்கூட அறிய முடியாமல் நினைவின்றி கொடிய வறுமையினால் தவழ்ந்துகூட செல்லமுடியாமல் இவர்கள் கிடப்பதைக் காண முடிகின்றது. என்புதோல் போர்த்திய உடம்புகள் இவைகள்தானோ என்று மனது கனக்கிறது. "பசி என்பது என்ன? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? என்று வள்ளலார் சொல்கிறார் ....
பிற உயிர்களின் பசியை ஆற்றுவதே ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முக்கியக் குறிக்கோள். உயிர்கள்மீது கருணை காட்டும் இந்த ஒழுக்கமானது, மனிதருக்கு முக்தியை அருளும். பசியில்லாவிட்டால் மக்கள் உணவுக்காக ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாதபோது, ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும். மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உதவிக்கருவிதான் பசி! பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம். பசிநோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள். பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள். இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். வயதானவர்கள் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும். வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.
எனவே வறுமையாலும் பசியாலும் வாடும் மக்களை நினைத்துப் பார்ப்போம். அதேநேரம் நமது வறுமையையும் நினைத்துப் பார்ப்போம். வளர்ச்சிக்கு வறுமை ஒரு தடைதான். அதுவும் இளமையில் வறுமை ஒரு தடைக்கல்தான்!. ஆனால் அதனை வெல்லவே முடியாதா? வறுமையை வென்று வெற்றி பெற்றவர்கள் இல்லையா? வீட்டில் படிக்கவே வசதி இல்லாமல் தெருவிளக்கில் படித்தவர் ஆபிரகாம் லிங்கன். ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டங்களையும் தோல்விகளையும் சந்தித்தவர். இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராக ஆகியிருக்கிறாரே!. ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புக்களுக்கு உரிமையாளரான அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் படிக்கவே தகுதியில்லாதவர் என ஒதுக்கப்பட்ட ஏழை!. ஓடும் இரயிலில் தினத்தாள் விற்றுக் கொண்டிருந்தவர். மின்சார உற்பத்திக்கும் மின்வேதியல் ஆய்வுக்கும் அளப்பரிய பணிகளைச் செய்துள்ள மைக்கேல் ஃபாரடே, புத்தகங்களைத் தைக்கும் தொழிலாளியாக வேலை செய்தவர். ஏன், நமது இராமேஸ்வரத்து அப்துல்கலாம் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஒவ்வோர் ஆண்டும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் போது அதிக மதிப்பெண்கள் பெறும் பல மாணவ மாணவியர் ஏழைக் குடும்பங்களில் பிறந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே அன்பர்களே, உற்சாகமாக உழைப்பவர்கள் எதிலும் வெற்றியைப் பெறுகிறார்கள். வளர்ச்சிக்கு வறுமை தடைக்கல் அல்ல.







All the contents on this site are copyrighted ©.