2012-06-18 14:33:46

கவிதைக் கனவுகள் ... நதிநீர்


வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம்
பிணக்குகளைத் தீர்த்து வைக்க வேண்டிய நீதிமன்றம்
இயற்கை இலவசமாகத் தரும் தண்ணர்ப் பங்கீட்டுக்கும்
விசாரணை நடத்துகிறது

மாரித்தாய்த் தாராளத்தை தாராளமாகவே காட்டினால்
நதி, நீரைப் பங்கிடுவதில் தாராளம் தெரியும்
நீர்த்தேக்கங்கள் நிறைந்தது போக
கடல் அன்னையின் உயரத்திலும் தாராளம் தெரியும்

நீர்ப் பற்றாக்குறையை வயல்கள் கழனிகள்
நிலநடுக்க விரிசல்களாகக் கோலம் போடுகின்றன
நிலத்தை நம்பி வயிறு வளர்க்கும் மனிதர்
நிலத்துக்குள்ளே நிரந்தரமாய்ப் புதைந்துவிட
உயிர்க்கொல்லி மருந்துகளை உணவுடன் கலக்கின்றனர்

எந்தக் கட்சியும் எந்த மாநிலமும் எந்த நாடும்
உற்பத்தி செய்யாத நதிநீர்
பிறப்பது ஒரு மாநிலம் சங்கமமாவது அடுத்த மாநிலம்.
பிறப்பது ஒரு நாடு கடலோடு கலப்பது வேறொரு நாடு
இனம் பாராது மொழி பாராது முகம் பாராது
எல்லாரையும் வளமாக்கிக் கொண்டிருக்கும்
நதிநீரின் நற்பண்பு பாய்ந்தோடட்டும்
நானிலம் ஆளும் தலைவர்களில்.
வறுமை ஒழியட்டும் நாடுகளில்.








All the contents on this site are copyrighted ©.