2012-06-18 15:16:55

அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் நாளைக் குறித்து திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


ஜூன்,18,2012. பல்வேறு துன்ப நிகழ்வுகளால் தாங்கள் பிறந்த மண்ணைவிட்டு தப்பியோடும் மக்களை நாம் நினைவு கூர்ந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு ஐ.நா. அமைப்பினால் கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக புலம்பெயர்ந்தோர் நாள் நம்மை அழைக்கிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஜூன் 20ம் தேதி, வருகிற புதனன்று கடைபிடிக்கப்படும் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் நாளைக் குறித்து இஞ்ஞாயிறு தன் மூவேளை செப உரையில் திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.
பத்தாயிரத்துக்கும் அதிகமாய் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, போர்களாலும், பல்வேறு சமுதாய மோதல்களாலும் நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்துள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி, தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைவதற்கு தன் செபங்களையும், ஆசீரையும் வழங்கினார்.
வேளாண்மையின் பின்னணியில் இந்த ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியைக் குறித்தும் தன் மூவேளை செப உரையில் பேசியத் திருத்தந்தை, இறைவார்த்தையும், இறையரசும் நம் உள்ளங்களில் வளர்வதற்கு நமது ஒத்துழைப்பும், அர்ப்பணமும் தேவை என்று எடுத்துரைத்தார்.
அயர்லாந்தில் இஞ்ஞாயிறன்று நிறைவுற்ற அனைத்துலக திருநற்கருணை மாநாட்டைக் குறித்தும் தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, நற்கருணை மாநாட்டின் விளைவாக மனிதகுலம் அனைத்திற்கும் இறைவனின் தொடர்ந்த பிரசன்னம் கிடைக்கவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.