2012-06-15 16:05:23

மன்னார் ஆயர் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படுவதற்குத் திருத்தந்தை தலையிடுமாறு கோரிக்கை


ஜூன்15,2012. இலங்கையின் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு அநியாயமாய் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படுவதற்குத் திருத்தந்தை தலையிடுமாறு மன்னாரில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் விண்ணப்பிக்கப்பட்டது.
மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் Jayalath Jayawardena, பல அரசு அமைச்சர்கள் மற்றும் ஊடகங்களால் ஆயர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றார் என்று கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பாக இப்புதனன்று திருத்தந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், திருத்தந்தை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசோடு பேசி மன்னார் ஆயரின் பாதுகாப்புக்கு உறுதி வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது என UCA செய்தி நிறுவனம் கூறியது.
இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப்பட்ட பன்னாட்டு குழு ஒன்று தேவை என மன்னார் ஆயர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.