2012-06-15 16:01:36

திருத்தந்தை, ஐ.நா. பொது அவையின் 66வது அமர்வின் தலைவர் சந்திப்பு


ஜூன்15,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொது அவையின் 66வது அமர்வின் தலைவர் Nassir Abdulaziz al-Nasserஐ இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் Abdulaziz al-Nasser.
உலகில் இடம்பெறும் சண்டைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், குறிப்பாக அதன் பொது அவையின் பங்கு பற்றியும், உலகில் தற்போது சண்டைகள் இடம்பெற்று வரும் பல்வேறு பகுதிகள், குறிப்பாக, ஆப்ரிக்கா, மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகள் பற்றியும், இச்சண்டைகள் ஏற்படுத்தும் கடும் அவசர மனிதாபிமான நெருக்கடிகள் பற்றியும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு, மதங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் போன்ற தலைப்புக்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்றும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.