2012-06-15 16:06:21

தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஏற்படும் சிறார் இறப்புக்களை நிறுத்துவதற்கு உலக அளவில் முயற்சி


ஜூன்15,2012. தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் ஏற்படும் சிறார் இறப்புக்களை நிறுத்துவதற்கு அரசுகளும் அரசு-சாரா அமைப்புகளும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனமும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் எத்தியோப்பிய நாடுகளின் அரசுகளும், ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யுனிசெப் நிறுவனமும் இணைந்து சிறாரைக் காப்பாற்றுவதற்கான உயர்மட்ட கூட்டம் ஒன்றை வாஷிங்டனில் இவ்வியாழனன்று நடத்தியுள்ளன.
உலகில், குறிப்பாக, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகளிலும், தெற்கு ஆசியாவிலும் இலட்சக்கணக்கான சிறார் ஐந்து வயதை எட்டு முன்னரே ஆண்டுதோறும் இறக்கின்றனர். 2010ம் ஆண்டில், ஆயிரம் குழந்தைகளுக்கு 57 குழந்தைகள் வீதம் இறந்தன என்று யுனிசெப் அறிவித்தது. இவ்விறப்பை 20 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையாக 2035ம் ஆண்டுக்குள் மாற்றுவதற்கு இக்கூட்டத்தில் நாடுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையை நாடுகள் நிறைவேற்றினால் 2035ம் ஆண்டுக்குள் மேலும் 4 கோடியே 50 இலட்சம் சிறாரின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் என்று யுனிசெப் கூறியது.








All the contents on this site are copyrighted ©.