2012-06-15 16:04:29

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேரள ஆயர்கள் புதிய திட்டம்


ஜூன்15,2012. உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வரும்வேளை, இப்பாதிப்புக்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவும் நோக்கத்தில் கேரள ஆயர்கள் புதிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கியுள்ளனர்.
சூரியசக்திப் பயன்பாடு, மழைநீர்ச் சேகரிப்பு, சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், காடுகள் அழிந்து வருவதைத் தடுத்தல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டும் கொள்கையை வகுத்துள்ளனர் கேரள ஆயர்கள்.
இம்மாதத்தில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் ஆயர்கள் வெளியிட்ட அறிக்கையில் இக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய மக்கள் தொகை நெருக்கம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 பேர் வீதம் என்ற நிலையில் இருக்க, இது கேரள மாநிலத்தில் 859 பேராக இருப்பதாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு கூறுகிறது. மேலும், கேரளாவின் காடுகள் 12,300 ஏக்கருக்கும் மேலாக ஒவ்வோர் ஆண்டும் அழிக்கப்பட்டு வருகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இயற்கைக்கு எதிரான பாவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் இப்புதிய கொள்கை, குருத்துவக் கல்லூரிகள் மற்றும் மறைக்கல்வி வகுப்புக்களில் சுற்றுச்சூழல் ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் பாடங்கள் எடுக்கப்படுமாறும் பரிந்துரைக்கின்றது.







All the contents on this site are copyrighted ©.