2012-06-14 16:55:04

மனித மாண்பை நிலைநிறுத்தும் முன்னேற்றங்களைச் சிந்திக்க வேண்டும் - பேராயர் தொமினிக் மம்பர்த்தி அழைப்பு


ஜூன்,14,2012. தனி மனிதர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மாண்பு ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டால், நாம் இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பன்னாட்டுத் தூதர்களை இத்திங்களன்று உரோம் நகரில் சந்தித்த திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பேசினார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளும் பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய அம்சங்களில் ஒருங்கிணைப்பை உருவாக்கி வந்துள்ளது என்பதைக் கூறிய பேராயர் மம்பர்த்தி, அரசியல் கருத்தியலிலும் நாடுகள் ஒன்றிணைந்து வரும் முயற்சிகள் தேவை என்பதை எடுத்துரைத்தார்.
தொழில் நுட்பத்தில் மிக அதிகமான அளவு முன்னேற்றம் கண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், மனித வளம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும், நன்னெறி மதிப்பீடுகளையும், மனித மாண்பையும் நிலைநிறுத்தும் முன்னேற்றங்களைச் சிந்திக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார், பேராயர் தொமினிக் மம்பர்த்தி.








All the contents on this site are copyrighted ©.