2012-06-14 16:55:17

குழந்தைகளும், சிறுவர்களும் பாதுகாப்பானச் சூழலில் வளர்வதற்குத் திருஅவை தீவிரமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது


ஜூன்,14,2012. குழந்தைகளுக்கு உரிய மதிப்பை வழங்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை கத்தோலிக்கத் திருஅவை வளர்ப்பதில் மிகவும் முனைப்பாய் உள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அயர்லாந்தில் நடைபெறும் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் அயர்லாந்தில் உள்ள Lough Derg என்ற தீவுக்கு, அயர்லாந்தின் திருப்பீடத் தூதர் பேராயர் Charles Brown அவர்களுடன் திருப்பயணம் சென்றிருந்தார்.
அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பாட்ரிக் அவர்களின் மிகப் பழமையானத் திருத்தலம் உள்ள இந்தத் தீவுக்குத் திருத்தந்தையின் விருப்பப்படி சென்றிருந்த கர்தினால் Ouellet, அங்கு செபத்திலும், உண்ணா நோன்பிலும் ஒரு நாள் கழித்தார்.
அயர்லாந்தின் குருக்கள் சிலரால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் ஒரு சிலரை அத்திருத்தலத்தில் சந்தித்த கர்தினால் Ouellet, அவர்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பை வேண்டினார்.
தான் இப்பழமையான திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டு, பாலியல் வன்முறைகளுக்குள்ளானவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது திருத்தந்தை தனக்களித்த சிறப்பான பணி என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Ouellet, குழந்தைகளும், சிறுவர்களும் பாதுகாப்பானச் சூழலில் வளர்வதற்குத் திருஅவை தீவிரமான முயற்சிகள் மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.