2012-06-13 16:30:53

பிளவுபட்டிருக்கும் திருஅவை இளையோரைத் திருஅவையிலிருந்து விலகிச்செல்ல வழிவகுக்கும் - டப்ளின் பேராயர் Martin


ஜூன்,13,2012. கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்டிருக்கும் திருஅவை இளையோரை தன்னிடம் ஈர்ப்பதற்குப் பதில், அவர்களைத் திருஅவையிலிருந்து விலகிச்செல்ல வழிவகுக்கும் ஆபத்து உண்டு என்று டப்ளின் பேராயர் Diarmuid Martin கூறினார்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் ஜூன் 10ம் தேதி ஞாயிறு முதல் வருகிற ஞாயிறு வரை நடைபெற்றுவரும் அனைத்துலகத் திருநற்கருணை மாநாட்டில் உரையாற்றிய டப்ளின் பேராயர் Martin, ஒருங்கிணைந்த திருஅவை விவிலிய விழுமியங்களைத் துணிவுடன் எடுத்துரைக்கவேண்டும் என்று கூறினார்.
புதிய வழிகளில் நற்செய்தியைப் பரப்புவதற்கு மறைந்த திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களும், தற்போதைய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் விடுத்துவந்துள்ள அழைப்பை சுட்டிக்காட்டிய பேராயர் Martin, அயர்லாந்திலும் ஐரோப்பாவிலும் நற்செய்தியைப் புதிய வழிகளில் எடுத்துரைப்பது அனைவரின் கடமை என்று கூறினார்.
அனைத்துலக திருநற்கருணை மாநாடு அயர்லாந்தில் உள்ள திருஅவையை இன்னும் சக்திவாய்ந்த முறையில் ஒருங்கிணைக்கும் என்ற தன் நம்பிக்கையை பேராயர் Martin தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.