2012-06-13 16:31:19

திருப்பீடத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உயர்மட்டக் கூட்டம்


ஜூன்,13,2012. திருப்பீடத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தொடரும்வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று திருப்பீட பத்திரிக்கை அலுவலகம் அறிவித்தது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் குறித்து வத்திக்கான் அப்போஸ்தலிக்க இல்லத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
நாடுகளுடனான திருப்பீட உறவுகளின் நேரடிச் செயலர் பேரருள்திரு Ettore Balestrero, திருப்பீடத்தின் சார்பிலும், இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சர் Danny Ayalon இஸ்ரேல் நாட்டின் சார்பிலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இஸ்ரேல் நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ளும் பணிகள், திருஅவையின் நிறுவனங்களும் அவற்றிற்கு விதிக்கப்படும் வரிகள் ஆகிய அம்சங்கள் பற்றி இக்கூட்டத்தில் பேசப்பட்டது என்று பேரருள்தந்தை Balestrero வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இவ்விரு நாடுகளின் உறவுகளை வளர்க்க இதுவரை உழைத்து ஒய்வு பெறும் பேராயர் Antonio Franco, இஸ்ரேல் நாட்டின் தூதர் Mordechay Lewy ஆகியோரின் சேவை இக்கூட்டத்தில் பாராட்டப்பட்டது.
இவ்விரு நாடுகளின் அடுத்தக் கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் 6ம் தேதி நிகழும் என்ற முடிவுடன் கூட்டம் நிறைவடைந்தது.








All the contents on this site are copyrighted ©.