2012-06-13 16:32:05

திருஅவையில் திருப்புமுனைகள் – கோடி அற்புதர்


ஜூன்13,2012. “நீங்கள் நடந்த பாதை நாங்கள் படிக்கும் வேதம்”. மதங்களிலும் சமூகத்திலும் நமக்கு முன்னர் வாழ்ந்த சில மாமனிதர்களும், தூய மனிதர்களும் நடந்து சென்ற பாதைகள் நூற்றாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்து இம்மண்ணில் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியும் அவர் நடந்த பாதை எண்ணற்ற மனிதர்களால் பின்பற்றப்பட்டு, இயேசு போன்று, அவர்களும் மக்கள் மனங்களில் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். “இந்த உலகிலுள்ள அனைத்து விவிலியப் பிரதிகளும் தொலைந்து போனாலும் அவற்றை மீண்டும் இவரால் நிச்சயம் எழுத முடியும்” என்று 1228ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் கிரகரி வியந்து பாராட்டும் அளவுக்கு விவிலிய மறையுரைகள் வழங்குவதில் சிறந்து விளங்கியவர் புனித பதுவை அந்தோணியார். கோடி அற்புதர், இழந்த பொருள்களைக் கண்டுபிடிக்க உதவுபவர், தீய ஆவிகளை விரட்டுபவர் என்றெல்லாம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் புகழப்படுபவர் இப்புனிதர். ஏதாவது ஒரு பொருளை எங்காவது வைத்துவிட்டு அதைத் தேடும் போது இந்தப் புனிதரின் பக்தர்கள் சொல்வார்கள் “எங்க அந்தோணியாரைக் கூப்பிட்டீங்களா?” என்று. அவர்கள் சொல்வதுபோல் காணாமற்போன பொருள்கள் கிடைத்து விடுகின்றன. இலங்கை, மலேசியா, இந்தியா உட்பட பல நாடுகளில் இப்புனிதர்மீது கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல, பிற மதத்தவருக்கும் பக்தி உண்டு. தென் தமிழகத்தில் புளியம்பட்டி, உவரி அந்தோணியார் திருத்தலங்கள் புகழ் அறியாதவர் இருக்கமாட்டார்கள். கத்தோலிக்கத் திருஅவையில் மக்களால் மிகவும் விரும்பப்படும் புனிதர்களில் இவரும் ஒருவர்.
புனித அந்தோணியாரின் உடல் கட்டமைப்பு அவ்வளவு கவர்ச்சியாக இருக்காது. அவர் சற்று பருமனாக்க் காணப்பட்டார். ஆனால் இவரது உரைகளையும் போதகங்களையும் கேட்கும் எல்லாருக்கும் அவர்மீது அப்படி ஓர் ஈர்ப்பு. புன்சிரிப்பால் பிறரைக் கவர்ந்திழுப்பவர். நல்ல குரல்வளம் மிக்கவர். இவருக்கு அபார நினைவுத்திறன் உண்டு. 1195ம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் பிறந்தவர் அந்தோணியார். இவரது இயற்பெயர் Fernando de Bulhoes. அக்காலத்தில் லிஸ்பன் இஸ்பெயினின் ஒரு பகுதியாக இருந்தது. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இவர் இறைபக்தி மிக்கவர். இவர் தனது 15வது வயதில் தனது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக, லிஸ்பன் நகரிலிருந்த புனித அகுஸ்தீன் துறவு சபையில் சேர்ந்தார். ஆயினும் 1219ம் ஆண்டில் இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. மொரோக்கோ நாட்டில் முஸ்லீம்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்ற 5 பிரான்சிஸ்கன் சபைத் துறவியர் அந்நாட்டில் கொல்லப்பட்டனர். துண்டு துண்டாய் வெட்டப்பட்ட அவர்களது உடல்கள் Fernando படித்துக் கொண்டிருந்த Coimbraவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த 5 பேரும் Fernandoவுக்கு நன்கு பழக்கமானவர்கள். Fernandoவும் இந்த பிரான்சிஸ்கன் சபைத்துறவிகளின் எளிய, வீரத்துவமான வாழ்வால் கவரப்பட்டு தானும் அச்சபையில் சேர்ந்து கிறிஸ்துவுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்ய விரும்பினார். அகுஸ்தீன் சபையினரிடம் அனுமதி பெற்று 1220ம் ஆண்டு கோடைகாலத்தில் தனது 25வது வயதில் பிரான்சிஸ்கன் சபையின் சீருடையைப் பெற்றார். புனித வனத்து அந்தோணியார் மீது கொண்டிருந்த பக்தியால் தனது பெயரையும் அந்தோணி என மாற்றிக் கொண்டார். தமிழில் மதிப்பின்நிமித்தம் நாம் அந்தோணியார் என்று அழைக்கிறோம்.

அந்தோணியும் பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மொரோக்கோவுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். ஆயினும் இறைவன் திட்டம் வேறுவிதமாக இருந்தது. அங்கு இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் இஸ்பெயினுக்குக் கப்பலில் புறப்பட்டார். ஆனால் இவர் பயணம் செய்த கப்பல் புயல் காரணமாக இத்தாலியின் சிசிலித் தீவை அடைந்து மெசினா என்ற துறைமுகத்தைப் பாதுகாப்பாகச் சென்றடைந்தது. அங்கு அவர் பிரான்சிஸ்கன் சபைத் துறவியரைச் சந்தித்தார். இவரது உடல்நிலையைக் கண்ட அவர்கள், இவர்மீது பரிவுகொண்டு பொலோஞ்ஞா நகருக்கு அருகில் கிராமப் பகுதியில் வாழ வைத்தனர் அந்தோணியார் அதிகம் படித்தவர். ஆயினும் சமையல் அறையில் உதவி செய்து கொண்டு ஒரு தவமுனிவர் போல் வாழ்ந்து வந்தார். 12 மாதங்கள் இவ்வாறு வாழ்ந்த இவருக்கு 1222ம் ஆண்டில் இவரது 27வது வயதில் மற்றுமொரு திருப்புமுனை ஏற்பட்டது. அவ்வாண்டில் Ricciardellus Belmonti என்ற ஆயர், பல தொமினிக்கன் மற்றும் பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளுக்குக் குருத்துவத் திருநிலைப்பாடு அளித்தார். பின்னர் தொமினிக்கன் சபை இல்லத்தில் நடந்த நிகழ்வில் உரையாற்ற வேண்டியவர் வரவில்லை. எனவே இந்த நிகழ்வுக்கு உகந்த முறையில் யாராவது ஒரு சிறிய உரை நிகழ்த்த முடியுமா என்று அங்கிருந்த எல்லாரையும் மாநில அதிபர் கேட்டார். அக்கூட்டத்தின் முக்கியத்துவம் தெரிந்திருந்ததால் உரையாற்ற யாரும் முன்வரவில்லை. பின்னர் மாநில அதிபர் சகோதரர் அந்தோணியை எளிமையாக ஓரிரு வார்த்தைகள் பேசச் சொன்னார்.
உரையாற்றுவதற்குத் தயக்கத்தோடு ஒத்துக்கொண்டாலும், அவரது உரையின் போது அவரது திறமை, ஆழமான மறைநூல் அறிவு, நாவன்மை, மக்களின் நெஞ்சங்களை மேலெழுப்பும் ஆற்றல் என அத்தனையும் வெளிப்பட்டன. அங்கிருந்த அனைவரும் மலைத்துப் போயினர். அவர் பேசத் தொடங்கியதும் தாங்கள் ஒரு பேரறிவாளர், பேராற்றல்மிக்க போதகர் முன்னர் இருக்கிறோம் என்பதை எல்லாரும் உணர்ந்து கொண்டனர். பிரான்சிஸ்கன் சபையைத் தோற்றுவித்த அசிசி நகர் புனித பிரான்சிஸ்க்குக்கு, அந்தோணியார் “கடவுளின் வியப்புக்களில்” ஒன்றாகத் தெரிந்தார். இந்த முதல் உரைக்குப் பின்னர் அந்தோணியாரின் திறமைகள் ஒவ்வொன்றாக வெளியாகின. இவரது பேச்சைக் கேட்க மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்ததால் நகரத்தில் பொதுவிடத்தில் மேடை அமைக்கப்பட்டது. அக்காலத்திய செல்வந்தரின் பேராசைகளையும் பகட்டு வாழ்க்கையையும் தனது உரைகளில் சாடினார். ஆயர்களும் குருக்களும் மக்களின் நலனைப் புறக்கணித்து, ஆடம்பரமாக வாழும் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று பொதுவில் குரல் எழுப்பினார். தனது உரையைக் கேட்பவர்கள் தங்களது பிழைகளை எண்ணி வருந்தி மனமாற வேண்டுமென்றார். விவிலியத்திற்கு மாறாகப் போதிப்பவர்கள் மனமாற்றமடைய வேண்டுமென்பதற்காகப் புதுமைகளைச் செய்தார். ஏட்ரியாடிக் கடற்கரையிலுள்ள ரிம்னி என்ற ஊரில் மக்கள் இவரது உரையைக் கேட்கவில்லை. எனவே கடல்பக்கம் திரும்பி மீன்களுக்குப் போதித்தார். அன்பு, பக்தி பற்றி விவரிப்பதற்கு இவர் நெருப்பை உருவகமாகப் பயன்படுத்தினார்.
தூய ஆவி ஒருவரின் ஆன்மாவில் நுழையும் போது அது நெருப்பால் அதை நிரப்பி மற்றவர்களையும் பற்றிக் கொள்ளச் செய்கின்றது என்று சொல்வார் அந்தோணியார். இவரிடம் பாவிகள் பலர் வந்தனர். ஏழைகள்மீது பரிவிரக்கம் கொண்டவர். இதனாலே இவரது திருவிழா அன்று ஆலய வளாகங்களில் ஏழைகளுக்கு ரொட்டிகள் வழங்கப்படுகின்றன. குழந்தை இயேசு இவர் கையில் அமர்ந்த உருவங்களைப் பார்க்கிறோம். இவர் தனது இறுதிக்கால உரைகளை இத்தாலியின் பதுவா நகரில் நிகழ்த்தினார். இதனால் அந்நகரில் சண்டைகள் ஒழிந்தன. நிரந்தரப் பகைவர்களாக இருந்தவர்கள் ஒப்புரவானார்கள், ஏழைக்கடனாளிகள் சிறைகளிலிருந்து விடுதலை அடைந்தனர். ஒழுக்கமற்று வாழ்ந்த ஆண்களும் பெண்களும் வாழ்வுப் பாதையை மாற்றியமைத்தனர். திருடர்களும் குற்றவாளிகளும் தங்களது பாதையை மாற்றினர். மொத்தத்தில் பதுவா நகரின் பொதுவாழ்க்கை மிகவும் முன்னேறியது. இறுதியில் நோயுற்று தனது 36வது வயதில் 1231ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பதுவாவில் இறந்தார். இவர் இறந்து 352 நாள்களுக்குள் புனிதர் என அறிவிக்கப்பட்டார். இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பசிலிக்கா எழுப்பப்பட்டுள்ளது. இவரது அழியா நாக்கு இன்றும் பதுவா பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது.
அன்பர்களே, நாவு ஒரு தீப்பொறி போன்றது. அது ஒரு காட்டையே அழித்துவிடும். எனவே நாவை அடக்கி ஆள இப்புனிதரிடம் செபிப்போம். ஜூன்13 இப்புதன் இந்தப் புனித பதுவை அந்தோணியார் திருவிழா.
திருஅவையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்களின் வரலாறு தொடரும்.








All the contents on this site are copyrighted ©.