2012-06-13 16:30:06

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் துறவியர் கூட்டமைப்பின் தலைவர்கள் விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர்களுடன் சந்திப்பு


ஜூன்,13,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணிபுரியும் அருள் சகோதரிகளின் அர்ப்பண வாழ்வும் பணியும் அந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவைக்கு பெரும் சாட்சியாக விளங்குகிறது என்று திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் துறவியர் கூட்டமைப்பின் தலைவர் அருள்சகோதரி Pat Farrell அவர்களும், செயல்பாட்டு இயக்குனர் அருள்சகோதரி Janet Mock அவர்களும் இச்செவ்வாயன்று திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் William Levada அவர்களைச் சந்தித்தபின் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
திருப்பீடத்தின் சார்பில், அமெரிக்காவில் பணிபுரியும் பெண் துறவியர் வாழ்வை ஆய்வைச் செய்து மாற்றங்களை பரிந்துரைத்துள்ள பேராயர் Peter Sartain அவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.
பெண் துறவியர் வாழ்விலும், கருத்தியலிலும் உள்ள ஒரு சில குறைபாடுகளை விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் சுட்டிக்காட்டியுள்ளது என்று இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
திருப்பீடத்துடன் நடைபெற்ற இந்த சந்திப்பு திறந்த மனதுடன் நடைபெற்றது என்று கூறிய அருள்சகோதரி Farrell, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பெண் துறவியர் கூட்டமைப்பின் அடுத்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.